திருக்குறள் - 1305     அதிகாரம்: 
| Adhikaram: pulavi

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

குறள் 1305 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nalaththakai nallavarkku aeer pulaththakai" Thirukkural 1305 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு ஓரழகாம், பூ வன்னகண்ணார்மாட்டுப் புலத்தல். நமக்கு ஆவார்மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது) நலத்தகை நல்லவர்க்கு ஏர் - நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான், 'நலத்தகை நல்லவர்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல் தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.) நலத்தகை நல்லவர்க்கு ஏர்-நற் குணங்களால் தகுதியுடைய நல்ல ஆடவர்க்கும் அழகாவது ; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் மலர் போலுங் கண்களையுடைய மகளிரின் நெஞ்சில் நிகழும் புலவிச் சிறப்பன்றோ ? தான் நுகர்ந்த சிறந்த இன்பத்திற் கேதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு . தவறில்லாதவர்க்கும் புலவி இனிதென்பான் , "நலத்தகை நல்லவர்க்கும் ஏஎர்" என்றான் . அழகு இன்பப் பயனாகிய மனவெழுச்சி . சிறப்பும்மை தொக்கது . ' ஏஎர்' இசை நிறையளபெடை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நலமானதை அணிகலன்களாக கொண்ட நல்லவர்க்கு மதிப்பானது பூ போன்ற கண்களை உடையவளின் அகத்தே ஊடல் கொள்வது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நல்ல தகைமைகள் பொருந்தியுள்ள நல்ல ஆடவருக்கு அழகாவது, மலரன்ன கண்களையுடைய அவர் காதலியர் இடத்தே உண்டாகும் ஊடலின் சிறப்பே ஆகும்.

Thirukkural in English - English Couplet:


The Even to men of good and worthy mind, the petulance
Of wives with flowery eyes lacks not a lovely grace.

ThirukKural English Meaning - Couplet -Translation:


An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.

ThiruKural Transliteration:


nalaththakai nallavarkku aeer pulaththakai
pooanna kannaar akaththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore