நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
Transliteration
nallaaNmai enpadhu oruvaRkuth thaanpiRandha
illaaNmai aakkik koLal.
🌐 English Translation
English Couplet
Of virtuous manliness the world accords the praise
To him who gives his powers, the house from which he sprang to raise.
Explanation
A man's true manliness consists in making himself the head and benefactor of his family.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.
2 மணக்குடவர்
ஒருவனுக்கு மிக்க ஆண்மையென்று சொல்லப்படுவது, தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை மனத்தின்கண் போக்கிக் கோடல். ஆளுதலுடைமை- குடியோம்புதலை எப்பொழுதுஞ் சிந்தித்தல். எனவே இது குடியோம்புதல் வேண்டுமென்றது.
3 பரிமேலழகர்
ஒருவற்கு நல்லாண்மை என்பது - ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் - தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல். (போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். குடியினையாளுந் தன்மை - குடியிலுள்ளாரை உயரச்செய்து தன் வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஒருவற்கு நல் ஆண்மை என்பது-ஒருவனுக்கு நல்ல ஆண்மையென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல் ஆண்மை ஆக்கிக் கொளல்-தான் பிறந்த குடியை ஆளுந் தன்மையைத் தனக்கு உண்டாக்கிக் கொள்ளுதல். குடியாளுந் தன்மையாவது குடியிலுள்ள வரை முன்னேற்றித் தன் வயப்படுத்துதல். பேராண்மையினின்று வேறுபடுத்தற்கு ’நல்லாண்மை’ யென்றார். இவ்விரு குறளாலும் குடிசெய்வாரின் தலைமை கூறப்பட்டது.
5 சாலமன் பாப்பையா
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.
6 கலைஞர் மு.கருணாநிதி
நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.
7 சிவயோகி சிவக்குமார்
நல்லாண்மை என்ற நிறைந்த மனித ஆற்றல் என்பது ஒருவற்குத் தான் பிறந்த குடியை இல்லாண்மை ஆக்கிக் கொள்வதே.
8 புலியூர்க் கேசிகன்
‘ஒருவனுடைய நல்லாண்மை’ என்பது, தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையை, அவன், தன்னிடம் உளதாக ஆக்கிக் கொள்ளுதலே ஆகும்.
More Kurals from குடிசெயல்வகை
அதிகாரம் 103: Kurals 1021 - 1030