திருக்குறள் - 1216     அதிகாரம்: 

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

குறள் 1216 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nanavena ondrillai aayin kanavinaal" Thirukkural 1216 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நனவென்று சொல்லப்படுகின்ற ஒருபாவி இல்லையாயின் கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார். ('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நனவு என ஒன்று இல்லையாயின் - நனவென்று சொல்லப்படுகின்ற ஒரு காலவேறுபாடு இல்லையாயின்; கனவினாற் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடுங் காதலர் என்னைவிட்டு ஒருபோதும் பிரியார். இடைவிடாது கனவு காணலாமாதலின் 'நீங்கார்' என்றாள். 'ஒன்று' என்பது வேறுபாடு விளக்கி நின்றது. 'மன்' அந்நிலைமையில்லை யென்பதுபட நிற்றலின் ஒழியிசை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நேரில் நிகழ்வது என்று ஒன்றில்லை என்றால் கனவில் காதலர் நீங்காமல் இருப்பார் அன்றோ.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நனவு என்று சொல்லப்படும் ஒன்று இல்லையானால், கனவில் வருகின்ற நம் காதலர் நம்மை விட்டு எப்போதுமே பிரியாதிருப்பார் அல்லவோ!

Thirukkural in English - English Couplet:


And if there were no waking hour, my love
In dreams would never from my side remove.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.

ThiruKural Transliteration:


nanavena ondrillai aayin kanavinaal
kaadhalar neengalar man.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore