நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.
Transliteration
nanavinaal kandadhooum aange kanavundhaan
kanda pozhudhae inidhu.
🌐 English Translation
English Couplet
As what I then beheld in waking hour was sweet,
So pleasant dreams in hour of sleep my spirit greet.
Explanation
I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
2 மணக்குடவர்
நனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதைக்கு இன்பமாம்; அதுபோலக் கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொழுதைக்கு இன்பமாம். இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) நனவினான் கண்டதூஉம் (இனிது) ஆங்கே - முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று, அப்பொழுதே; கனவும் தான் கண்டபொழுதே இனிது - இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன. (இனிது' என்பது முன்னும் கூட்டப்பட்டது. கனவு -ஆகுபெயர். முன்னும் யான் பெற்றது இவ்வளவே, இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
நனவினாற் கண்டதும் ஆங்கே (இனிது) - முன்பு நனவின்கண் காதலரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதே இனிதாயிருந்தது; கனவும் தான் கண்டபொழுதே இனிது - இன்று கனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அக்கண்ட பொழுதே இனிதாயிருந்தது. ஆதலால் இரண்டும் எனக்கு ஒத்தனவே. முன்னும் யான் பெற்ற இன்பம் இவ்வளவே. அதை இன்னும் இங்ஙனமே பெற்று ஆற்றுவேன் என்பதாம். 'கண்டதூஉம்' இன்னிசையளபெடை. ஏகாரங்கள் பிரிநிலை. 'கனவு' ஆகுபொருளி. 'இனிது' முன்னுங் கூட்டப்பட்டது. மூன்றாம் வேற்றுமை ஆனுருபு ஏழாம் வேற்றுமைப் பொருளில் மயங்கிற்று.
5 சாலமன் பாப்பையா
முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.
6 கலைஞர் மு.கருணாநிதி
காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!.
7 சிவயோகி சிவக்குமார்
நேரில் கண்டு இருந்தது எப்படியோ கனவில் கண்ட பொழுதும் இருந்தது அதே இனிமை.
8 புலியூர்க் கேசிகன்
முன்பு நனவில் கண்ட இன்பமும் அந்தப் பொழுதளவிலே இனிதாயிருந்தது; இப்பொழுது காணும் கனவும், காணும் அந்தப் பொழுதிலே நமக்கு இனிதாகவே யுள்ளது.
More Kurals from கனவுநிலையுரைத்தல்
அதிகாரம் 122: Kurals 1211 - 1220
Related Topics
Because you're reading about Dreams of Love