Kural 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

nandrikku viththaakum nallozhukkam theeyozhukkam
endrum idumpai tharum.

🌐 English Translation

English Couplet

'Decorum true' observed a seed of good will be;
'Decorum's breach' will sorrow yield eternally.

Explanation

Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

2 மணக்குடவர்

முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும். தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.

3 பரிமேலழகர்

நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும். - ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். ('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.).

4 ஞா. தேவநேயப் பாவாணர்

நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் - ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந்தரும் ; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீயவொழுக்கம் எக்காலும் துன்பமே தரும் . மறுமையில் விளையும் இன்பத்திற்கு இம்மையில் ஒழுகும் நல்லொழுக்கம் வித்துப்போன்றிருத்தலால் , 'வித்தாகும்' என்றார் . தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் என்பதால் , நல்லொழுக்கம் இம்மையிலும் இன்பந்தருதல் பெற்றாம் .

5 திருக்குறளார் வீ. முனிசாமி

நல்லாருக்கும் என்பது நன்மையான அறத்திற்கு விதைபோன்ற காரணமாகும். தீய ஒழுக்கமானது எப்போதும் துன்பத்தினைத் தருவதாகும்.

6 சாலமன் பாப்பையா

நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.

8 சிவயோகி சிவக்குமார்

நன்றியுனர்வுக்கு விதையாக நல்லொழுக்கம் அமையும், தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தை தரும்.

More Kurals from ஒழுக்கமுடைமை

அதிகாரம் 14: Kurals 131 - 140

Related Topics

Because you're reading about Discipline & Conduct

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature