நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்.
Transliteration
Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar
Sorporul Sorvu Patum.
🌐 English Translation
English Couplet
Though deepest sense, well understood, the poor man's words convey,
Their sense from memory of mankind will fade away.
Explanation
The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.
2 மணக்குடவர்
நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும். ஏற்றுக்கொள்வாரில்லை என்றவாறாயிற்று. இது கல்வி கெடும்: சுற்றத்தாரும் கைவிடுவ ரென்றது.
3 பரிமேலழகர்
நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும். (பொருளின்மையைத் தலைப்படுதலாவது 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும் என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
நல்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும்-சிறந்த நூற்பொருளைத் தெளிவாக அறிந்து விளக்கமாகவும் இனிதாகவும் எடுத்துச் சொன்னராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வுபடும்-வறியவர் சொல்லுஞ் சொல் தன் பொருட் சிறப்பை இழந்துவிடும். பொருட் சிறப்பிழத்தல், கேட்பாரின் இகழ்ச்சியினாலும் பொருளுதவி வேண்டுவாரென்னும் அச்சத்தினாலுமாம். ’’நொய்தாந் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தாம் இரப்போன் நுவலுங்கால்-நொய்யசிறு பஞ்சுதனின் நொய்யானைப் பற்றாதோ காற்றெனின் அஞ்சும்அவன் கேட்ப தறிந்து.’’ என்னும் நீதிவெண்பாச் செய்யுள் இங்கு நினைக்கத்தக்கது. உம்மை உயர்வு சிறப்பு.
5 சாலமன் பாப்பையா
நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.
6 கலைஞர் மு.கருணாநிதி
அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.
7 சிவயோகி சிவக்குமார்
நல்லனவற்றை தெளிவாக பொருள்படும்படி நன்றாக உணர்ந்து சொன்னாலும் இல்லாமையில் இருப்பவர் சொல்லும் பொழுது அப்பொருள் முழுமை பெறாது.
8 புலியூர்க் கேசிகன்
நல்லவான பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னார் ஆனாலும், வறுமைப்பட்டவர் சொல்லும் சொற்கள், பொருள் பயவாதவாய்ச் சோர்வு பட்டுவிடும்.
More Kurals from நல்குரவு
அதிகாரம் 105: Kurals 1041 - 1050
Related Topics
Because you're reading about Poverty