நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்.
Transliteration
neengin theRuu-um kuRukungaal thaNNaennum
theeyaaNdup petraaL ivaL.
🌐 English Translation
English Couplet
Withdraw, it burns; approach, it soothes the pain;
Whence did the maid this wondrous fire obtain?.
Explanation
From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.
2 மணக்குடவர்
தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ எவ்விடத்துப் பெற்றாள் இவள். இது புணர்ச்சி உவகையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்தலாயிற்று.
3 பரிமேலழகர்
(பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது.) நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ - தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை; இவள் யாண்டுப் பெற்றாள் - என்கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள். (கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால் தண் என்னும்' என்றும், இப்பெற்றியதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(தலைமகன் பாங்கற் கூட்டத் திறுதிக்கட் சொல்லியது) நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீ- தன்னைவிட்டு அகன்றாற் சுடுவதும் தனக்கு நெருங்கினாற் குளிர்வதுமான புதுமைத் தீயை; இவள் யாண்டுப் பெற்றாள்- இவள் எங்கிருந்து பெற்றாள்? பாங்கற் கூட்டமாவது, முன்றாம் நாள் தலைமகள் இருக்குமிடத்தைத் தலைமகன் தோழன் வாயிலாக அறிந்துசென்று கூடியது. கூடு முன்னும் பிரியும்போதும் துன்புறுதலால் 'நீங்கிற் றெறூஉம்' என்றும், நெருங்கும் போதும் கூடும்போதும் இன்புறுதலாற் 'குறுகுங்காற் றண்ணென்னும்' என்றும், இத்தகைய தீ உலகத்திலில்லையாதலால் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான்.
5 சாலமன் பாப்பையா
தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?.
6 கலைஞர் மு.கருணாநிதி
நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்.
7 சிவயோகி சிவக்குமார்
விலகினால் அழிவும் நெருங்கினால் இதமான குளிர்ச்சியும் தரும் தீ ஒன்றை பெற்றுள்ளாள் இவள்.
8 புலியூர்க் கேசிகன்
தன்னை விட்டு விலகிச் சென்றால் சுடுதலும், அருகில் நெருங்கினால் குளிர்தலுமாகிய நெருப்பை, இவள் தான், எவ்விடத்திலிருந்து பெற்றுள்ளாளோ?
More Kurals from புணர்ச்சிமகிழ்தல்
அதிகாரம் 111: Kurals 1101 - 1110
Related Topics
Because you're reading about Joy of Union