திருக்குறள் - 276     அதிகாரம்: 
| Adhikaram: kootaavozhukkam

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

குறள் 276 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nenjin thuravaar thurandhaarpoal vanjiththu" Thirukkural 276 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சிற் றுறவாராய்த் துறந்தாரைப் போல வஞ்சனை செய்து வாழுமவர்களைப் போலக் கொடியா ரில்லை யுலகத்து.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சின் துறவார் - நெஞ்சால் பற்று அறாது வைத்து, துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - பற்று அற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுபவர் போல், வன்கணார் இல் - வன்கண்மையையுடையார் உலகத்து இல்லை. (தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, 'யாம் மறுமைக்கண் தேவராற்பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்' என்று அறியாது ஈந்தாரை, அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். 'அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த் - தடங்கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி உடம்போடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர் - மடங்கலஞ் சீற்றத்துப் பின் மானவேல் மன்னர் ஏறே' (சீவக. முத்தி - 244) என்பதனால் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின் 'வன்கணார் இல்' என்றார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - உள்ளத்திற் பற்றாது பற்றற்றவர்போல் நடித்துப் பிறரை யேமாற்றி வாழும் பொய்த் துறவியரைப்போல; வன்கணார் இல் - கொடியவர் இவ்வுலகத்தில் இல்லை. கன்னியரையும் பிறர் மனைவியரையுங் கற்பழித்தலும், அடைக்கலப் பொருளைக் கவர்தலும், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தலும்,கொள்ளை யடித்தலும் ,தம் விருப்பம் நிறைவேறும் பொருட்டு எத்துணை நல்லவரையுங் கொல்லுதலும் ,ஆகிய தீவினைகளிலெல்லாம் வல்லவரும் ,கடுகளவும் மனச்சான்று இல்லவருமாதலின் கூடாவொழுக்கத்தினர் போற் கொடியர் பிறரில்லையென்றார்.பற்றற்றவர் போல் நடிப்பவரும் நடியாதவருமாகிய இருவகைக்கொடியோருள், நடிப்பவர் மிகக் கொடியவர் என்பது கருத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தில் ஆசைகள் நீங்காமல் வைத்துக்கொண்டு ஆசை இல்லாதவர்கள் போல வஞ்சித்து வாழ்கின்ற கொடிய தன்மை யுடையவர்களைப் போலக் கொடியவர்கள் உலகில் இல்லை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சத்தில் தேவைகளை அகற்றாமல் தேவை அற்றவர்போல் சூழ்ச்சி செய்து வாழ்பவரை விட வன்மையானவர்கள் இல்லை.

Thirukkural in English - English Couplet:


In mind renouncing nought, in speech renouncing every tie,
Who guileful live,- no men are found than these of 'harder eye'.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it).

ThiruKural Transliteration:


nenjin thuRavaar thuRandhaarpoal vanjiththu
vaazhvaarin van-kaNaar il.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore