நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து.
Transliteration
neru-natruch chendraar-em kaadhalar yaamum
ezhunaalaem maeni pasandhu.
🌐 English Translation
English Couplet
My loved one left me, was it yesterday?
Days seven my pallid body wastes away!.
Explanation
It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
2 மணக்குடவர்
எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம். இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) எம் காதலர் சென்றார் நெருநற்று - எம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனி பசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம். ('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது என்பாள். 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(இதுவுமது) எம் காதலர் நெருநற்றுச் சென்றார் - எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து போனார் ; யாமும்மேனி பசந்து எழுநாளேம்- அப்பிரிவிற்கு யாமும் மேனி பசலை யடைந்து எழுநாட் கழிந்த நிலையில் இருக்கின்றேம் . நேற்றுச் செய்த பேரின்பக் கூட்டத்தால் பிரிவு துணியப் பட்ட தென்பாள் ' நெருநற்றுச் சென்றார் ' என்றும் , அதனை எழு நாட்கு முன்பே ஐயுற்றதனால் அன்றே மேனி பசந்த தென்பாள் ' மேனிபசந்தெழு நாளேம் ' என்றும் , கூறினாள் . இதனால் தலைமகன் பிரிதற்குறிப் புணர்த்தப் பட்டது.
5 சாலமன் பாப்பையா
என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.
6 கலைஞர் மு.கருணாநிதி
நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.
7 சிவயோகி சிவக்குமார்
நேற்றுதான் சென்றார் எம் காதலர் எனோ ஏழு நாள் போல் மேனி பசந்தது.
8 புலியூர்க் கேசிகன்
நேற்றுத்தான் எம் காதலர் எம்மைப் பிரிந்து சென்றனர்; யாமும், அவரைப் பிரிந்து ஏழுநாட்கள் ஆகியவரைப் போல மேனி பசலை படர்ந்தவராய் இருக்கின்றோமே!
More Kurals from குறிப்பறிவுறுத்தல்
அதிகாரம் 128: Kurals 1271 - 1280