நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள்.
Transliteration
niRainhenjam illavar thoaivaar piRanhenjiR
paeNip puNarpavar thoaL.
🌐 English Translation
English Couplet
Who cherish alien thoughts while folding in their feigned embrace,
These none approach save those devoid of virtue's grace.
Explanation
Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.
2 மணக்குடவர்
நிறையுடைய நெஞ்சில்லாதார் தோய்வர்: இன்பமில்லாத பிறவாகிய பொருளை நெஞ்சினாலே விரும்பிவைத்து அன்புற்றார் போலப் புணருமவரது தோளினை. இது நிறையில்லாதார் சேர்வரென்றது.
3 பரிமேலழகர்
நெஞ்சின் பிற பேணிப் புணர்பவர் தோள் - நெஞ்சினாற் பிறவற்றை ஆசைப்பட்டு அவைகாரணமாகக் கொடுப்பாரை மெய்யாற் புணரும் மகளிர் தோள்களை; நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் - நிறையால் திருந்திய நெஞ்சம் இல்லாதார் தோய்வர். (பொருளும் அதனால் படைக்கப்படுவனவும் விரும்பும் நெஞ்சு அவற்றின் மேலதாகலின், புணர்வது உடம்பு மாத்திரம் என்பது அறிந்து, அது வழி ஓடாது நிற்கும் நெஞ்சினையுடையார். தோயாமையின், அஃதிலார் 'தோய்வர்' என்றார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
நிறைநெஞ்சம் இல்லவர் தீயவழியிற் செல்லாதவாறு மனத்தைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலில்லாத ஆடவர்; நெஞ்சில் பிற பேணிப் புணர்பவர் தோள் தோய்வர்- காதலாலும் மதிப்பாலும் உள்ளத்திற் கூடாமல் பொருளையும் ஆதனாற் பெறுவனவற்றையுமே விரும்பி உடம்பால் மட்டும் கூடும் விலைமகளிர் தோள்களைத் தழுவுவர். உள்ளத்தாற் கூடாமற் பொருளாசை பற்றி உடம்பால் மட்டும் கூடும் விலைமகளிர், பொருள் கொடுத்தால் அன்று மட்டும் தரும் இன்பத்தின் பொதுமை சிறுமை பொய்ம்மை நோய்களை அறிந்து தம்மனத்தை அடக்கியவர் தோயாராதலின் ,அவரல்லாதவர் தோய்வர் என்றார்.
5 சாலமன் பாப்பையா
பிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்.
6 கலைஞர் மு.கருணாநிதி
உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்.
7 சிவயோகி சிவக்குமார்
நிறைவான மனம் இல்லாதவரே நாடுவார் அடுத்தவர் மனதை கவனித்து புணர்பவர் தோள்.
8 புலியூர்க் கேசிகன்
நெஞ்சிலே பொருள் மேல் ஆசைகொண்டு, அதைப் பெறக் கருதிப் பொருள் தருபவரோடு உடலால் கூடியிருக்கும் மகளிரது தோள்களை, நெஞ்சமில்லாதவர்களே சேர்வர்.
More Kurals from வரைவின்மகளிர்
அதிகாரம் 92: Kurals 911 - 920