நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து.
Transliteration
noanaa udampum uyirum madaleRum
naaNinai neekki niRuththu.
🌐 English Translation
English Couplet
My body and my soul, that can no more endure,
Will lay reserve aside, and mount the 'horse of palm'.
Explanation
Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
2 மணக்குடவர்
பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்: நாணினை நீக்கி நின்று. இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.
3 பரிமேலழகர்
('நாணுடைய நுமக்கு அது முடியாது', என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன; நாணினை நீக்கி நிறுத்து - அதனை விலக்குவதாய நாணினை அகற்றி. ('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகுபெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற்குறை நேர்தல் நோக்கி.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
( நாணுடைய நுமக்கு அது முடியாதென மடல்விலக்கிய தோழிக்குத் தலைமகன் சொல்லியது . ) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அத்துன்பத்தைப் பொறாத வுடம்பும் உயிரும் தமக்குக் காப்பான மடற்குதிரையை ஏறக் கருதுகின்றன ; நாணினை நீக்கி நிறுத்து - அதற்குத் தடையான நாணத்தை நீக்கி வைத்து . அறிவு நிறை யோர்ப்புக் கடைப்பிடி யென்னும் ஆண்மைக்குணம் நான்கும் முன்னரே நீங்கிவிட்டன் . எஞ்சியிருக்கும் நாணம் என்னும் இருபாற் பொதுக் குணமும் , ' மடலேற்றத்தின் பொருட்டு நீக்கப்பட்டுவிடும் . அல்லாக்கால் உயிரும் உடம்பும் துன்பம் பொறுத்துக்கொண்டு உடனிற்கு மாறில்லை யென்பான் , 'நோனாவுடம்பு முயிரும் மடலேறும் ' என்றான் . ' உழந்து வருந்தினார்க்கு ' என மேற்குறிளில் வந்தமையின் , இங்கு ' நோனா ' என்று மட்டுங் கூறினார் . ' மடலேறும் ' என்றது தோழி தன் ஆற்றாமை யறிந்து விரைந்து குறைமுடிப்பாள் என்று கருதி . ' மடல் ' ஆகுபெயர் .
5 சாலமன் பாப்பையா
காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.
6 கலைஞர் மு.கருணாநிதி
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.
7 சிவயோகி சிவக்குமார்
தாங்கமுடியா காமத்தால் உடம்பும் உயிரும் அச்சப்பட வேண்டிய மடலேறும் எனவே நாணத்தை விலக்கி வை.
8 புலியூர்க் கேசிகன்
காதலியின் அன்பைப் பெறாத துயரத்தைத் தாங்கமுடியாத என் உடம்பும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி நிறுத்திவிட்டு, மடலூரத் துணிந்துவிட்டன.
More Kurals from நாணுத்துறவுரைத்தல்
அதிகாரம் 114: Kurals 1131 - 1140