Kural 320

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

noayellaam noaiseydhaar maelavaam noaiseyyaar
noayinmai vaendu pavar.

🌐 English Translation

English Couplet

O'er every evil-doer evil broodeth still;
He evil shuns who freedom seeks from ill.

Explanation

Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

2 மணக்குடவர்

இக்காலத்து நுகர்கின்ற துன்பமெல்லாம் முற்காலத்துப் பிறர்க்குத் துன்பம் செய்தார் மாட்டே யுளவாம்: ஆதலால் இக்காலத்துப் பிறர்க்கு துன்பத்தைச் செய்யார் வருங்காலத்துத் தமக்குத் துன்பம் வாராமையை வேண்டுபவர்.

3 பரிமேலழகர்

நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - இன்னாதன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம், நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார். ('உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் 'அதுவே', (சீவக. முத்தி 164) ஆகலின், நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்' என்றார். இது சொற்பொருள் பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

நோய் எல்லாம் நொய் செய்தார் மேலவாம்- துன்பங்களெல்லாம் முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் பிறவுயிர்கட்குத் துன்பஞ் செய்தாரையே சார்வனவாம்; நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார்- ஆதலால், தம்முயிர்க்குத் துன்பம் வேண்டாதவர் பிறிதோர் உயிர்க்குத் துன்பஞ் செய்யார். "தன்வினை தன்னைச் சுடும்". "வினைவிதைத்தவன் வினை அறுப்பான்". ஆதலால் தன்னலம் பற்றியேனும் பிறருக்குத் தீமை செய்யாதிருக்க என்று படர்க்கையில் வைத்துக் கூறினார். இதில் அமைந்துள்ள அணி சொற்பொருட் பின்வருநிலை.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

துன்பமெல்லாம், பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்தவர் மேலதேயாகும். ஆதலால், தம் உயிர்க்குத் துன்பம் வேண்டாதவர்கள் பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்ய மாட்டார்கள்.

6 சாலமன் பாப்பையா

செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.

7 கலைஞர் மு.கருணாநிதி

தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.

8 சிவயோகி சிவக்குமார்

தீமை என்பது தீமைச் செய்பவருக்கே உரியது. தீமையைச் செய்யாதவரே தீமை இன்றி வாழத் தகுதியுடையவர்.

More Kurals from இன்னாசெய்யாமை

அதிகாரம் 32: Kurals 311 - 320

Related Topics

Because you're reading about Non-Violence

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature