Kural 683

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

noolaaruL noolvallan aakudhal vaelaaruL
vendri vinaiyuraippaan paNpu.

🌐 English Translation

English Couplet

Mighty in lore amongst the learned must he be,
Midst jav'lin-bearing kings who speaks the words of victory.

Explanation

To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

2 மணக்குடவர்

எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.

3 பரிமேலழகர்

வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல். ('கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

வேலாருள் வென்றிவினையுரைப்பான் பண்பு-வேற்படையுடைய வேற்றரசரிடஞ் சென்று தன் அரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்வானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்-அரசியல் நூலை அறிந்தவருள் தான் அந்நூலறிவிற் சிறந்தவனாயிருத்தலாம். கொல்லுந் திறத்தினர் என்பது தோன்ற 'வேலார்' என்றும், இருவகைத்தூது வினையும் அடங்க 'வென்றிவினை' என்றும், கூறினார். 'வல்லனாகுதல்' அந்நூற் செய்தியெல்லாவற்றையும் தெளிவாக அறிந்திருத்தலும், தவறாகச் சொன்னவிடத்து அதைத் திருத்துதலுமாம்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

வேலினையுடைய வேற்றரசனிடம் சென்று தம் அரசனுக்கு வெற்றியைத் தரும் தொழில் சொல்வானுக்கு இலக்கணமாவது, நீதி நூல்களைக் கற்ற அமைச்சருக்குள் தான் அவற்றில் வல்லவனாதல்.

6 சாலமன் பாப்பையா

அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.

8 சிவயோகி சிவக்குமார்

நூல் படைப்பவர்களில் வல்லமையான நூல் படைக்க அவைகளை கற்று அறிய வேண்டும். அதுபோலவே, வேல் பாய்ச்சுபவர்களை கடந்து வெற்றிக்கான செயல்களை உரைப்பது பண்பு.

More Kurals from தூது

அதிகாரம் 69: Kurals 681 - 690

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature