Kural 1327

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

oodalil thotravar vendraar adhumannum
kootalir kaanap padum.

🌐 English Translation

English Couplet

In lovers' quarrels, 'tis the one that first gives way,
That in re-union's joy is seen to win the day.

Explanation

Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

2 மணக்குடவர்

ஊடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்க அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து. புணராதொழியினும் இன்பமாமென்று கூறியவாறு.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும். (தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இதுவுமது) ஊடலில் தோற்றவர் வென்றார் - ஊடலில் தோற்ற மகளிர் வென்றவராவர்; அது மன்னும் கூடலிற் காணப்படும்- அவ்வெற்றி மிகுதியும் பின்னர்ப் புணர்ச்சிக்கண் அவரால் அறியப்படும். தோற்றவர் ஊடலைக் கடைப்பிடிக்காது இடையில் விட்டு விட்டவர். அவர் கலவிக்கண் பேரின்பம் பெறுதலால் வென்றாராயினர். 'மன்' மிகுதிப் பொருளது.தலைமகன் கலவியால் பேரின்பம் பேறும்போதே தலைமகளும் பெறுதல் கண்டானாதலாலும், அவள் ஊடல் நீங்கிய பொழுது ஒருவகைத் தோல்வி மனப்பான்மை கொண்டிருந்ததனாலும் , அவளைப் பாராட்டி ஊக்குமுகமாகத் 'தோற்றவர் வென்றார்' என்றான். ஊடல் ஆடவருக்கின்மையின், தலைமகன் ஊடலில் தோற்றானென்று கூறுவது பெருந்திணையாகுமேயன்றி அன்பினைந்திணையாகாதென அறிக. அடுத்த குறளையும் பார்க்க.

5 சாலமன் பாப்பையா

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.

6 கலைஞர் மு.கருணாநிதி

ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்.

7 சிவயோகி சிவக்குமார்

ஊடலில் தோற்றுப் போனவரே வெற்றிபெற்றவர் அதை புரியச் செய்வது கூடி மகிழ்வதே ஆகும்.

8 புலியூர்க் கேசிகன்

ஊடல் களத்திலே தோற்றவரே வெற்றி பெற்றவர்; அந்த உண்மையானது, ஊடல் தெளிந்தபின், அவர் கூடி மகிழும் தன்மையிலே தெளிவாகக் காணப்படும்.

More Kurals from ஊடலுவகை

அதிகாரம் 133: Kurals 1321 - 1330

Related Topics

Because you're reading about Joy of Reconciliation

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature