ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா.
Transliteration
ootuka mannoa oliyizhai yaamirappa
needuka mannoa iraa.
🌐 English Translation
English Couplet
Let her, whose jewels brightly shine, aversion feign!
That I may still plead on, O night, prolong thy reign!.
Explanation
May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.
2 மணக்குடவர்
விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும். இது மனவூக்கத்தின்கண் வந்தது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) ஒளி இழை ஊடுக மன் - ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக. ('ஊடுக', 'நீடுக' என்பன வேண்டிக்கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(இதுவுமது) ஒளியிழை மன் ஊடுக - ஒளி வீசும் அணிகலங்களையுடையாள் இன்னும் எம்மொடு மிகுதியும் ஊடுவாளாக; யாம் இரப்ப இரா மன் நீடுக- அவள் அங்ஙனம் ஊடுதற்கும் யாம் அதை யுணர்த்தும் பொருட்டு அவளை இரந்து நிற்றற்கும் போதிய அளவு காலமிருக்கும் வகை இவ்விரவு மிகுதியும் நீடுவதாக. 'ஊடுக' , 'நீடுக' என்பன ஆர்வ வியங்கோள் வினைகள். 'மன்' மிகுதிப்பொருளது ஓகாரங்கள் அசைநிலை. 'ஒளியிழை' அன்மொழித்தொகை. பின்னர்ப் பேரின்பம் பெறக் கூடுதல் உறுதியாதலின், அவ்விராமுழுதும் ஊடலே நிகழினும் நன்றேயென்பதாம்.
5 சாலமன் பாப்பையா
ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.
7 சிவயோகி சிவக்குமார்
ஊடுதல் செய்யவேண்டும் ஒளியைப் போன்றவள் அதுவே இரவை நீளச் செய்யும்.
8 புலியூர்க் கேசிகன்
ஒள்ளிய இழையை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும் வகையிலே, யாம், அவளை இரந்து நிற்கும்படியாக, இராக்காலமும் இன்னும் நீள்வதாக!
More Kurals from ஊடலுவகை
அதிகாரம் 133: Kurals 1321 - 1330
Related Topics
Because you're reading about Joy of Reconciliation