ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
Transliteration
orumai makaLirae poalap perumaiyum
thannaiththaan koNtozhukin undu.
🌐 English Translation
English Couplet
Like single-hearted women, greatness too,
Exists while to itself is true.
Explanation
Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.
2 மணக்குடவர்
கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத் தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போலப் பெருமைக் குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக் கொண்டொழுகுவானாயின் அவன்கண் உண்டாம்.
3 பரிமேலழகர்
ஒருமை மகளிரே போல - கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத்தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போல; பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு - பெருமைக்குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின் அவன்கண் உண்டாம். (பொருளின் தொழில், உவமையினும் வந்தது. கற்புண்டாதல் தோன்ற நின்றமையின், உம்மை எச்ச உம்மை. ஒழுகுதல் - மனம் மொழி மெய்களை ஒடுக்கி, ஒப்புரவு முதலிய செய்து போதல். இதனால், அஃது உளதாமாறு கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஒருமை மகளிரே போல - ஒரே கணவனைக் காதலித்துத் தம் கற்பைக் காத்துக் கொள்ளும் குல மகளிர் போல; தன்னைத் தான் கொண்டொழுகின்- ஓர் ஆடவனும் ஒரே மனைவியைக்,காதலித்து தன் கற்பைக் காத்துக் கொண்ட போதே; பெருமையும் உண்டு- பெருமைக் குணமும் அவனிடத்தில் உளதாகும். இதனால் கற்பென்பது இருபாற்கும் பொது வென்பதும், அது பெருமை பெறும் பெண்பாற்குப் போன்றே ஆண்பாற்கும் இன்றிமையாத தென்பதும், பெறப்பட்டன. இன்பத்தைச் சிறப்பாகக் கொண்ட அகப்பொருள்(இலக்கண) நூலார்க்கும் அறத்தைச் சிறப்பாகக் கொண்ட அறநூலார்க்கும் உள்ள கருத்து வேறுபாடும் இதனால் அறியப்படும். உம்மை எச்சவும்மை. "அடங்காத் தானை வேந்த ருடங்கியைந் தென்னொடு பொருது மென்ப வவரை ஆரம ரலறத் தாக்கித் தேரொ டவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த பேரம ருண்க ணிவளினும் பிரிக." என்னும் பூதப்பாண்டியன் வஞ்சினமும (புறம் 71) "பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம் நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற வள்ளித ழவிழ்ந்த தாமரை. நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே," (புறம் 246) என்னும் அவன் தேவியின் பாலை நிலைக் கூற்றும், இங்குக் கவனிக்கத் தக்கன. இக்குறளாற் பெருமைக் கின்றியமையாத துணைப் பண்பு கூறப்பட்டது.
5 சாலமன் பாப்பையா
தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.
6 கலைஞர் மு.கருணாநிதி
தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.
7 சிவயோகி சிவக்குமார்
ஒருவனையே ஏற்று வாழும் மகளிர் போலவே பெருமை தன்னை தானே அறிந்து தனக்கு நேர்மையாய் வாழ்வதால் உண்டாகும்.
8 புலியூர்க் கேசிகன்
கவராத மனத்தையுடைய மகளிர், நிறையிலே வழுவாமல் தம்மைத் தாமே காத்து ஒழுகுதலைப் போல, பெருமையும், தன்னைத்தான் காப்பவனிடமே உளதாகும்.
More Kurals from பெருமை
அதிகாரம் 98: Kurals 971 - 980
Related Topics
Because you're reading about Greatness