ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.
Transliteration
orumaikkaN thaan-katra kalvi oruvaRku
ezhumaiyum Emaap pudaiththu.
🌐 English Translation
English Couplet
The man who store of learning gains,
In one, through seven worlds, bliss attains.
Explanation
The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
2 மணக்குடவர்
ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து. கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.
3 பரிமேலழகர்
ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து. (வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை - மேலே கூறப்பட்டது(குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.) சி இலக்குவனார் உரை: நன்கு கருத்தைச் செலுத்தி உள ஒருமைப்பாட்டோடு கற்ற கல்வி ஒருவர்க்கு மிகுதியும் வலிமை ஆதலை உடையது.
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஒருவற்கு - ஒருவனுக்கு ; தான் ஒருமைக்கண்கற்ற கல்வி -தான் ஒரு பிறப்பிற் கற்ற கல்வி; எழுமையும் ஏமாப்பு உடைத்து -எழுபிறப்பளவுந் தொடர்ந்து அரணாகநின்று உதவுந் தன்மையயுடையது. கல்வியறிவு வினைகள் போல உயிரைப் பற்றித் தொடர்தலின், 'எழுமையும் ஏமாப்புடைத்து ' என்றார் . 'எழுமை ' என்றது தொடர்ந்த எழுமக்கட்பிறப்பை. அல்லாக்கால் அவ்வறிவு பயன்படாமை அறிக. ஏமாப்பு பாதுகாப்பு. உதவுதல் நல்வழியிற்செலுத்தி நலமாக வாழ்வித்தல். ஏழென்பது இங்குக் காலநீட்சி பற்றிய நிறைவெண்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
ஒருவனுக்குத் தன பிறப்பிலே கற்ற கல்வியானது எழுகின்ற பல பிறப்புக்களிலும் பாதுகாப்பாக உதவுதலை உடையதாகும்.
6 சாலமன் பாப்பையா
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.
8 சிவயோகி சிவக்குமார்
தனிமையிலும் தான் கற்ற கல்வி ஒருவாருக்கு உயர்ச்சியிலும் சிறந்ததாக மாறும்
More Kurals from கல்வி
அதிகாரம் 40: Kurals 391 - 400
Related Topics
Because you're reading about Education & Learning