ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.
Transliteration
oththa thaRavoan uyirvaazhvaan matraiyaan
seththaaruL vaikkap padum.
🌐 English Translation
English Couplet
Who knows what's human life's befitting grace,
He lives; the rest 'mongst dead men have their place.
Explanation
He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
2 மணக்குடவர்
ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன். அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன். இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.
3 பரிமேலழகர்
உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான் - உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேத நடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் - ஒப்புரவு செய்வானும்செய்யாதானுமாகிய இருவகைச் செல்வருள், செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - மற்றச் செய்யாதவன் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படுவான். உயிருக்குரிய அறிவுஞ் செயலுமின்மையின், நடைப்பிணமென்றுங் கருதப்படாது பிணமென்றே இழிந்திடப்படுவான் என்றார்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
உயிரோடு கூடி வாழ்பவன் என்பவன் உலக நடையினை அறிந்து வாழ்பவனாவான். அவ்வாறு அறிந்து வாழாதவன் செத்தவர்களுள் ஒருவனாக வைத்துக் கருதப்படுவான்.
6 சாலமன் பாப்பையா
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.
7 கலைஞர் மு.கருணாநிதி
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.
8 சிவயோகி சிவக்குமார்
பொதுவான அறம் போற்றுவான் உயிர் வாழ்பவன். மற்றவர்கள் மரித்தவர்கள் கணக்கில் வைக்கப்படும்.
More Kurals from ஒப்புரவறிதல்
அதிகாரம் 22: Kurals 211 - 220
Related Topics
Because you're reading about Benevolence