ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல்.
Transliteration
otrinaan otrip poruLdheriyaa mannavan
kotranG koLakkitandhadhu il.
🌐 English Translation
English Couplet
By spies who spies, not weighing things they bring,
Nothing can victory give to that unwary king.
Explanation
There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.
2 மணக்குடவர்
ஒற்றராலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை. இஃது ஒற்றின்மையால் வருங் குற்றங்கூறிற்று.
3 பரிமேலழகர்
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றினானே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; கொற்றம் கொளக் கிடந்தது இல் - வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை. (அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின் 'கொற்றம் கொளக் கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான் அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றரால் எல்லார் செய்திகளையும் மறைவாக அறிந்து வரச் செய்து அவற்றால் விளையும் பயனை ஆராய்ந்தறியா அரசன் ; கொற்றம் கொளக்கிடந்தது இல் - வெற்றியடையக் கூடிய வேறு வழியில்லை. நிகழ்ந்த செய்திகளையும் அவற்றின் விளைவையும் அறியாத அரசன் ,திடுமென்று பகைவரால் தாக்கப்படின் வெற்றியடைதற்கு வழியில்லை யாதலின், 'கொற்றங்கொளக் கிடந்ததில் ' என்றார். இதைக் கொளக்கிடந்தது கொற்றமில்லை எனச் சொன்முறைமாற்றி தோல்வியின்றிக் கொள்ளக்கிடந்ததொரு வெற்றியில்லை என்றுரைப்பினுமமையும்.
5 சாலமன் பாப்பையா
எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.
6 கலைஞர் மு.கருணாநிதி
நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.
7 சிவயோகி சிவக்குமார்
ஆய்ந்து அறிபவரை அறிந்து நடப்புகளை தெரிந்துக் கொள்ளா ஆட்சியாளரின் வெற்றி நிலைத்த வெற்றியாய் இருக்காது.
More Kurals from ஒற்றாடல்
அதிகாரம் 59: Kurals 581 - 590