Kural 588

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

otrotrith thandha poruLaiyum matrumoar
otrinaal otrik koLal.

🌐 English Translation

English Couplet

Spying by spies, the things they tell
To test by other spies is well.

Explanation

Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.

2 மணக்குடவர்

ஒற்றர் மாற்றரசர்மாட்டும் பொருள் பெற்று மாறுபடச் சொல்லுதல் கூடுமாதலால், ஓரொற்று அறிந்து சொன்ன பொருளைப் பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க.

3 பரிமேலழகர்

ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஒரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியந்தன்னையும்; மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றிக் கொளல் - பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க. (ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஓர் ஒற்றன் ஒற்றி வந்து அறிவித்த செய்திகளையும்; மற்றும் ஓர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் -வேறும் ஓரொற்றனால் ஒற்றுவித்து ஒப்பு நோக்கி உண்மை யறிந்து கொள்க. பகைவரோ டொத்து நின்று உண்மைக்கு மாறாகக் கூறும் ஒற்றருமிருப்பராதலின் ,ஓரொற்றன் கூற்றைக்கேட்ட மட்டில் நம்பி விடக்கூடாதென்றும் , ஒற்றர் பலரையுந் தனித்தனி மறைவாகக் கேட்டு அவர் கூற்றுக்கள் ஒத்துவந்த வழியே நம்பவேண்டு மென்றும் ,பாதுகாத்துக் கூறினார். ஒற்றுதல் மறைவாகப் பொருந்தியறிதல். உம்மை யிரண்டனுள் முன்னது உயர்வு சிறப்புக் கலந்த எச்சம். பின்னது இறந்தது தழுவிய எச்சம் .இதனால் ஒற்றரை ஆளும் வகை கூறப்பட்டது.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

ஓர் ஒற்றன் தெரிந்து வந்து அறிவித்த காரியத்தையும் மற்றோரு ஒற்றன் கொண்டுவந்த செய்தியுடன் ஒப்புமை கண்டு எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.

6 சாலமன் பாப்பையா

ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.

7 கலைஞர் மு.கருணாநிதி

ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

8 சிவயோகி சிவக்குமார்

கண்காணித்து தந்த தகவல்களை மேலும் ஒரு கண்காணிப்பினால் கண்காணித்து அறிந்துக் கொள்ளவேண்டும்.

More Kurals from ஒற்றாடல்

அதிகாரம் 59: Kurals 581 - 590

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature