திருக்குறள் - 581     அதிகாரம்: 
| Adhikaram: otraatal

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

குறள் 581 - திருவள்ளுவர் - ThiruValluvar

"otrum uraisaandra noolum ivaiyirandum" Thirukkural 581 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக. அரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் - ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; மன்னவன்கண் தெற்றென்க - அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக. (ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளையெல்லாம் சொல்லி உணர்த்தலானும்,இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றாற்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாகவந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்-ஒற்றும் புகழமைந்த அரசியல் நூலும் ஆகிய இவ்விரண்டையும்; மன்னவன் கண் தெற்று என்க-அரசன் தன் இரு கண்களாகத் தெளிக. ஒற்றுத்தன் கண் செல்லாத இடமெல்லாஞ்சென்று அங்கு நிகழ்ந்தவற்றை அறிவித்தலானும், நூல் தன் அறிவிற்கெட்டாத வினைகளையுஞ் சூழ்ச்சிகளையுந் தெரிவித்தலானும், இவ்விரண்டையும் அரசன் முறையே தன் புறக்கண்ணாகவும் அகக்கண்ணாகவும் கொண்டு ஒழுகுக என்றார். அரசனை அரசு என்பது போல் ஒற்றனை ஒற்று என்றார். தெற்றெனல், தெளிதல் அல்லது தெளிவாதல்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நடப்புகளை அறிவதும், விளக்கம் தரும் நூல்களும் என இரண்டும் சிறந்த ஆட்சியாளருக்கு கண் போன்றது.

Thirukkural in English - English Couplet:


These two: the code renowned and spies,
In these let king confide as eyes.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.

ThiruKural Transliteration:


otrum uraisaandra noolum ivaiyiraNdum
thetrenka mannavan kaN.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore