ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று.
Transliteration
ottaarpin sendroruvan vaazhdhalin anhnhilaiyae
kettaan enappatudhal nandru.
🌐 English Translation
English Couplet
Better 'twere said, 'He's perished!' than to gain
The means to live, following in foeman's train.
Explanation
It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.
2 மணக்குடவர்
ஒருவன் தன்னை இகழ்வார்பின் சென்று வாழும் வாழ்க்கையின், அவர்பால் செல்லாத அந்நிலையே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படுதல் நன்று.
3 பரிமேலழகர்
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் - தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின்; அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று - அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று. (ஒட்டுதல் - பொருந்துதல். 'அந்நிலையே' என்றது, செல்லாத முன்னை நிலைக்கண்ணே நின்று என்றவாறு, அப்பொழுதே என்றும் ஆம். 'புகழும் புத்தேள் நாடும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வாம'¢ என்பாரை நோக்கிக் கூறியது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஒருவன் ஒட்டார் பின் சென்று வாழ்தலின் - ஒருவன் தன்னை யிகழ்வார் பின் சென்று அவர் தரும் பொருள் பெற்று அதனால் உயிர் வாழ்தலினும் ; அந் நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று- தான் பொருளற்ற அப்பொழுதே உயிர் துறந்தான் அல்லது இறந்தான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நன்றாகும். ஒட்டுதல் உள்ளத்தாற் பொருந்துதல். அந்நிலை யென்றது ஒட்டார்பின் செல்லாத முன்னை நிலையை. ஏகாரம் பிரி நிலை. புகழும் புத்தேணாடும் பெறாவிடினும் பொருள்பெற்று வாழலாமே யெனின், அங்ஙனம் மானங் கெட்டு வாழ்வதினும் மானங்காத்து மாள்வதே சிறந்த தென்றுகூறியவாறு.
5 சாலமன் பாப்பையா
இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.
6 கலைஞர் மு.கருணாநிதி
தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்.
7 சிவயோகி சிவக்குமார்
ஒத்திசைவு இல்லாமல் புரியாத ஒருவர் பின் சென்று வாழும் அந்த நிலையைவிட கொட்டவன் எனப்படுதல் நன்று.
8 புலியூர்க் கேசிகன்
தன்னை இகழ்பவரின் பின்னே சென்று பொருள் பெற்று, அதனால் உயிர்வாழ்தலைவிட, இறந்தவன் என்று சொல்லப் படுதலே ஒருவனுக்கு நன்மை ஆகும்.
More Kurals from மானம்
அதிகாரம் 97: Kurals 961 - 970
Related Topics
Because you're reading about Honor & Dignity