திருக்குறள் - 187     அதிகாரம்: 
| Adhikaram: purangooraamai

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

குறள் 187 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pakachchollik kaelirp pirippar nakachcholli" Thirukkural 187 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர்: மகிழச் சொல்லி நட்பாடலை உயர்வுபண்ண மாட்டாதார். இது நட்டவரை யிழப்பர் என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - தம்மை விட்டு நீங்கும் ஆற்றால் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் - கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார். (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர் என்ற கருத்தான், 'அயலாரோடும்' என்பது வருவித்துரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்கு உறுதி என்று அறிதல். "கடியுமிடந் தேற்றான் சோர்ந்தனன் கை" (கலி. மருதம்.27) என்புழிப் போலத் 'தேற்றாமை' தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நகச் சொல்லி நட்பாடல் தேற்றாதவர் - மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடும் நட்பாடல் தமக்கு நன்றென்று தெளியாத புறங்கூற்றாளர்; பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - பிளவுண்டாகுமாறு புறங்கூறித் தம் உறவினரையும் தம்மை விட்டுப் பிரியப்பண்ணுவர். கேளிரையும் என்னும் சிறப்பும்மை தொக்கது. நட்பாடல் என்னுங் குறிப்பால் அயலாரோடும் என்பது வருவிக்கப்பட்டது. அவ்வும்மை எச்சவும்மை. தம் கேளிர் என்னாது கேளிர் என்று மட்டுங் குறித்ததினால், பிறரினத்தார்க்குள்ளும் புறங்கூற்றாற் பிரிவினையுண்டாக்குவர் என்பது பெறப்படும். இங்ஙனம் எல்லார்க்கும் பொல்லாதவராவர் என்பது கருத்து. தேறாதவர் என்னும் தன்வினை தேற்றாதவர் என்று பிறவினை வடிவில் நின்றது, "கனவிலுந்தேற்றாதார் மாட்டு" (குறள்: 1054) என்புழிப்போல.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


இனிய சொற்களைச் சொல்லி அயலாருடன் நட்புச் செய்தலினை அறியாதவர்கள், தம்மைவிட்டு நீங்குமாறு புறம் பேசிக் சுற்றத்தார்களையும் பிரியுமாறு செய்வர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


குறை சொல்லி உறவை பிரிப்பார்கள் நிறை சொல்லி நட்பை வளர்க்க இயலாதவர்கள்.

Thirukkural in English - English Couplet:


With friendly art who know not pleasant words to say,
Speak words that sever hearts, and drive choice friends away.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.

ThiruKural Transliteration:


pakachchollik kaeLirp pirippar nakachcholli
natpaatal thaetraa thavar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore