பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.
Transliteration
pakaipaavam achcham pazhiyena naankum
ikavaavaam illirappaan kaN.
🌐 English Translation
English Couplet
Who home ivades, from him pass nevermore,
Hatred and sin, fear, foul disgrace; these four.
Explanation
Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
2 மணக்குடவர்
பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்: பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு.
3 பரிமேலழகர்
இல் இறப்பான்கண் - பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் - பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம். (எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.).
4 ஞா. தேவநேயப் பாவாணர்
இல் இறப்பான் கண் - பிறன் மனைவியின் கண் நெறிகடந்து ஒழுகுபவனிடத்து; பகை , பாவம் , அச்சம் , பழி என நான்கும் இகவாவாம் - பகையும் கரிசும் அச்சமும் பழியும் ஆகிய நாற்கேடுகளும் ஒருகாலும் நீங்காவாம். அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும் பிறன்றாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்றாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென் றச்சத்தோ டிந்நாற் பொருள். (82) புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சந் தோன்றாமற் காப்பச்சம் எக்காலு மச்சந் தருமா லெவன்கொலோ வுட்கான் பிறனில் புகல் (83) காணிற் குடிப்பழியாங் கையுறிற் கால்குறையும் ஆணின்மை செய்யுங்கா லச்சமாம் -நீணிரயத் துன்பம் பயக்குமால் துச்சாரி நீகண்ட இன்ப மெனக்கெனைத்தாற் கூறு. (84) இவை நாலடியார்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
பகை, பாவம், அச்சம், பழி ஆகிய இந்த நான்கு குற்றங்களும் பிறன் மனைவியினிடத்தே நெறிகடந்து செல்லுபவனைவிட்டு ஒருகாலும் நீங்காவாம்.
6 சாலமன் பாப்பையா
அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.
7 கலைஞர் மு.கருணாநிதி
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.
8 சிவயோகி சிவக்குமார்
பகை பாவம் பயம் பழி என்ற நான்கும் பிரியாமல் இருக்கும் இல்லறத்தை துறந்தவன் இடத்தில்.
More Kurals from பிறனில் விழையாமை
அதிகாரம் 15: Kurals 141 - 150
Related Topics
Because you're reading about Avoiding Adultery