பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல்.
Transliteration
pakaiyakaththup paetikai oLvaaL avaiyakaththu
anju mavan-katra nool.
🌐 English Translation
English Couplet
As shining sword before the foe which 'sexless being' bears,
Is science learned by him the council's face who fears.
Explanation
The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.
2 மணக்குடவர்
பகையின்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும், அவையின்கண் அஞ்சுமவன் கற்றநூலும்.மேல் பயனில்லை யென்றார் இங்குப் பயனில்லாதவாறு காட்டினார்.
3 பரிமேலழகர்
பகையத்துப் பேடி கை ஓள்வாள் - எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்; அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல் - சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்ற நூல். (பேடி : பெண் இயல்பு மிக்கு ஆண் இயல்பும் உடையவள்.களமும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும் பிடித்தவள் குற்றத்தால் வாள் சிறப்பின்றாயினாற் போல, அவையும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும், கற்றவன் குற்றத்தால் நூல் சிறப்பின்றா யிற்று.) .
4 ஞா.தேவநேயப் பாவாணர்
அவையகத்து அஞ்சும் அவன் கற்ற நூல்-அவைக்கு முன்நின்று அதற்கு அஞ்சி நடுங்குபவன் கற்ற நூல்; பகையகத்துப் பேடிகை ஒள்வாள்-போர்க்களத்தில் நின்று போருக்கஞ்சும் கோழையன் பிடித்த கூர்வாளை யொக்கும். இயற்கைப் பேடியரும் செயற்கைப் பேடியரும் எனப் பேடியர் இருவகையர். செயற்கைப் பேடியர் உவளகக் காவற்கும் பேடிமைக்கும் பேடியராக்கப்பட்ட ஆடவராக்கப்பட்ட ஆடவராதலின், அவருள் மறவருமுளர். ஆதலால், பேடி என்பதற்குக் கோழையன் என்று பொருள் கூறப்பட்டது. அமர்க்கோழை வாளும் அவைக் கோழை நூலும் பயன் படாவென்பது கருத்து.
5 சாலமன் பாப்பையா
கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.
6 கலைஞர் மு.கருணாநிதி
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.
7 சிவயோகி சிவக்குமார்
போர்களத்தில் கேழையின் கூர்மையானவாள் எப்படி பயனற்றதோ அப்படியே அவைக்கு அஞ்சுபவர் கற்ற நூல் பயனற்றுப் போகும்.
More Kurals from அவையஞ்சாமை
அதிகாரம் 73: Kurals 721 - 730