திருக்குறள் - 1034     அதிகாரம்: 
| Adhikaram: uzhavu

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

குறள் 1034 - திருவள்ளுவர் - ThiruValluvar

"palakudai neezhalum thangutaikkeezhk kaanpar" Thirukkural 1034 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பல அரசர் குடைநிழலும் தம் அரசர் குடைநிழற்கீழே வரக்காண்பர், குடையில்லா நிழலை யுடையவர். குடையில்லா நிழலாவது பைங்கூழ் நிழல். இது தாம் வாழ்தலே அன்றித் தம் அரசனையும் வாழ்விப்பர் என்றது. (அலகுடைய நீழல்-கதிர்களையுடைய நெற்பயிரின்நிழல்).

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அலகு உடை நீழலவர் - உழுதல் தொழிலான் நெல்லினை உடையராய தண்ணளி உடையோர்; பலகுடை நீழலும் தம் குடைக்கீழ் காண்பர்-பலவேந்தர் குடை நிழலதாய மண்முழுதினையும் தம் வேந்தர் குடைக்கீழே காண்பர் (அலகு-கதிர், அ`ஃது ஈண்டு ஆகுபெயராய் நெல்மேலதாயிற்று. 'உடைய' என்பது குறைந்து நின்றது. நீழல் போறலின், நீழல் எனப்பட்டது. 'நீழலவர்' என்றது இரப்போர்க்கெல்லாம் ஈதல் நோக்கி ஒற்றுமை பற்றித் 'தங்குடை' என்றார். 'குடைநீழல்' என்பதூஉம் ஆகுபெயர். 'ஊன்று சால்மருங்கி்ன் ஈன்றதன் பயனே' (புறநா.35)என்றதனால், தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம், 'இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்' (சிலப்.நாடுகாண்.149)என்றார் பிறரும்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அலகு உடை நீழலவர்- நெல்லை விளைக்கும் ஈர நெஞ்சத்தாரான உழவர்; பல குடை நீழலும் தம் குடைக்கீழ்க்காண்பர்- பல வேற்றரசரின் குடை நிழலின்கீழுள்ள நாடுகளையும் தம் அரசன் குடைக்கீழ்க் கொண்டுவருவர். அரசனுக்கு ஆறிலொரு கடமை யிறுப்பதனாலும் போர்க் காலத்திற் படைமறவராகச் சென்று பொருது வெற்றி விளைத்தலாலும், பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர் என்றார். "வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல" தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி. (1581) "வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும்" வாய்ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே, (1582) என்பன தொல்காப்பியம். "பொருபடை தரூஉங் கொற்றமு முழுபடை ஊன்றுசால் மருங்கி னீன்றதன் பயனே." என்றார் வெள்ளைக்குடி நாகனார்.(புறம், 35) இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர் ,........ என்றார் இளங்கோவடிகள் (சிலப், 10;146-50). அலகு கதிர். அது இங்கு ஆகுபெயராய் நெல்லைக் குறித்தது. உடைய என்பது உடை எனக் குறைந்து நின்றது. 'நீழலவர்' என்றது இரப்போர்க் கெல்லாம் ஈயும் தண்ணளிபற்றி. 'குடை நீழல்' (நாடு) 'குடை' (ஆட்சி) என்பன ஆகுபெயர்கள். 'தங்குடை' என்றது ஒற்றுமையும் அன்பும் பற்றி, மணக்குடவரும் பரிப்பெருமாளரும் அலகுடை என்று பகுத்து, 'குடையில்லா' என்றும் 'குடையல்லாத' என்றும் முறையே பொருள் கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பல அரசுகளின் ஆட்சிச் சிறப்புகளையும் தனது ஆட்சிச் சிறப்புக்கு உட்பட்டு இருப்பதைக் காண்பர் உழவுத் தொழில் செய்து வாழ்பவர்கள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


உழுதலால் நெல்லுடையவரான கருணையாளர், பலவேந்தர் குடைநிழலது ஆகிய உலகம் முழுவதையும், தம் அரசனின் குடைக்கீழ் வந்து சேரக் காணும் சக்தியுடையவர் ஆவர்.

Thirukkural in English - English Couplet:


O'er many a land they 'll see their monarch reign,
Whose fields are shaded by the waving grain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The Patriotic farmers desire to bring all other states under the control of their own king.

ThiruKural Transliteration:


palakudai neezhalum thangutaikkeezhk kaaNpar
alakutai neezha lavar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore