பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லத நாடு.
Transliteration
palkuzhuvum paazhseyyum utpakaiyum vaendhalaikkum
kolkuRumpum illadhu naadu.
🌐 English Translation
English Couplet
From factions free, and desolating civil strife, and band
Of lurking murderers that king afflict, that is the 'land'.
Explanation
A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
2 மணக்குடவர்
பலபலவாய்த் திரளுந் திரட்சியும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தனை யலைக்கின்ற கொலைத் தொழிலினையுடைய குறும்பரும் இல்லாதது நாடு.
3 பரிமேலழகர்
பல்குழுவும் - சங்கேத வயத்தான் மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும்; பாழ் செய்யும் உட்பகையும் - உடனுறையா நின்றே பாழாகச் செய்யும் உட்பகையும்; வேந்து அலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு - அளவு வந்தால் வேந்தனை அலைக்கும் கொல்வினைக் குறும்பரும் இல்லாததே நாடாவது. (சங்கேதம் - சாதி பற்றியும் கடவுள் பற்றியும் பலர்க்கு உளதாம் ஒருமை. உட்பகை - ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மக்களும், பன்றி,புலி, கரடி முதலிய விலங்குகளும். 'உட்பகை, குறும்பு' என்பன ஆகுபெயர். இம்மூன்றும் அரசனாலும் வாழ்வாராலும் கடியப்பட்டு நடப்பதே நாடு என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஞா. தேவநேயப் பாவாணர் பல்குழுவும் - நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் பல்வேறு மாறுபாட்டுக் கூட்டங்களும்; பாழ்செய்யும் உட்பகையும் - அரசன் குடும்பத்துள்ளும் குடிகளுள்ளுமிருந்து நாட்டைப் பகைவர்க்குக் காட்டிக்கொடுத்துக் கேடுசெய்யும் அகப்பகைவரும்; வேந்து அலைக்கும் கொல் குறும்பும் - நாட்டிற்குள்ளிருந்து சமையம் வாய்க்கும் போதெல்லாம் போராலுங் கொள்ளையாலும் அரசனையும் குடிகளையுந் துன்புறுத்தும் அடங்காச் சிற்றரண் தலைவரும்; இல்லது நாடு - இல்லாததே (அமைதிக் கேற்ற) நல்ல நாடாவது. பல்குழுக்களாவன: அரச அரியணையேறற்குரிய பழவிறல்தாயம் பற்றிய பல்வேறு பிரிவினைக் கூட்டங்களும் குலவியலும் மதவியலும் பற்றிய பல்வேறு பகை வகுப்புக்களுமாம். உட்பகையாவார் தந்நலம் பற்றித் தாமாக நாட்டைக்காட்டிக் கொடுப்பாரும் பகைவராற்கீழறுக்கப்படுவாருமாம். குறும்பர் காட்டரணும் மலையரணுங்கொண்ட சிற்றரசர் போன்ற கொள்ளைத்தலைவர். குறும்பு - சிற்றரண். குறும்படைந்த வரண்கடந்து (புறம். 79) 'உட்பகை', 'குறும்பு' என்பன ஆகுபெயர். ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மாந்தர் குடிகளைச் சேர்ந்த குற்றவாளிகளேயன்றி உட்பகைவராகார். மேலும், அவர் மாக்களே யன்றி மக்களுமாகார். பன்றி இறைச்சியும், புலி தோலும்,கரடி கம்பளியும், உதவுவதாலும்; அவையும் அவை போன்ற காட்டு விலங்குகளும், விலங்கினச்சாலைக்கும் (zoo) மறவட்டக் (Circus) காட்சிக்கும் விலங்குநூற்(Zoology) கல்விக்கும் பயன்படுவதாலும் அவற்றுள் யானை பல்வேறு வகையில் மாந்தனுக்குப் பணி செய்வதாலும்; காட்டுவிலங்குகள் மிக்க விடத்து அவற்றை வேட்டையாடிக் கொல்ல முடியுமாதலாலும்; அவற்றையெல்லாம் உட்பகையென்று கொள்வது பொருந்தாதென்றும், அவற்றினுங் கொடியவை சுரமண்டலம், நண்டுத்தெறுக்கால், நச்சுப்பாம்பு, கடந்தை (கதண்டு), வெறிநாய் முதலிய பிறவென்றும், அறிந்துகொள்க.
5 சாலமன் பாப்பையா
சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.
6 கலைஞர் மு.கருணாநிதி
பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
பலதரப்பட்ட கூட்டங்களாகவும், விழ்ச்சிக்கு வழி வகுக்கும் உட்பகையும், அரசுக்கு எதிரான கொலைக்கு அஞ்சாத திவிரவாதிகளும் இல்லாமல் இருப்பது நாடு.
More Kurals from நாடு
அதிகாரம் 74: Kurals 731 - 740