Kural 191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

pallaar muniyap payanila solluvaan
ellaarum eLLap padum.

🌐 English Translation

English Couplet

Words without sense, while chafe the wise,
Who babbles, him will all despise.

Explanation

He who to the disgust of many speaks useless things will be despised by all.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

2 மணக்குடவர்

பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

3 பரிமேலழகர்

[அஃதாவது, தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பம் ஆகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமை. பொய்,குறளை,கடுஞ்சொல்,பயனில் சொல் என வாக்கின்கண் நிகழும் பாவம் நான்கனுள், பொய் துறந்தார்க்கு அல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின், அஃது ஒழித்து இல்வாழ்வாரால் கடியப்படும் ஏனை மூன்றனுள் , கடுஞ்சொல் இனியவை கூறலானும் , குறளை புறங்கூறாமையானும் விலக்கி, நின்ற பயனில் சொல் இதனான் விலக்குகின்றார் ஆகலின், இது புறங்கூறாமையின் பின் வைக்கப்பட்டது.) பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், 'எல்லாரும் எள்ளப்படும்' - எல்லாரானும் இகழப்படும். (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் வெறுக்குமாறு வீண் சொற்களைச் சொல்பவன்; எல்லாரும் எள்ளப்படும் - எல்லாராலும் இழிவாய் எண்ணப்படுவான். எல்லாரும் என்று பிற்குறித்ததனால் பல்லார் என்று முற்குறித்தது அறிவுடையாரை யென்பது உய்த்துணரப்படும். அறிவுடையார் வெறுக்கவே அவரைப் பின்பற்றி ஏனையோரும் வெறுப்பர் என்பது கருத்து. எள்ளுதல் மனத்தின் செயல்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

அறிவுடையார் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைப் பேசுகின்ற ஒருவன் எல்லா மக்களாலும் இகழப்படுவான்.

6 சாலமன் பாப்பையா

பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

7 கலைஞர் மு.கருணாநிதி

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.

8 சிவயோகி சிவக்குமார்

பல மனிதர்கள் முன்னிலையில் பயனற்றதை பேசுபவரை அனைத்து மனிதர்களும் ஏளனம் செய்வார்கள்.

More Kurals from பயனில சொல்லாமை

அதிகாரம் 20: Kurals 191 - 200

Related Topics

Because you're reading about Useful Speech

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature