பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யாற்றிரிந் தற்று.
Transliteration
paNpilaan petra perunjelvam nanpaal
kalandheemai yaaldhirinh thatru.
🌐 English Translation
English Couplet
Like sweet milk soured because in filthy vessel poured,
Is ample wealth in churlish man's unopened coffers stored.
Explanation
The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.
2 மணக்குடவர்
பண்பில்லாதவன் முன்னை நல்வினையா னெய்திய பெரிய செல்வம் அக்குற்றத்தால் ஒருவர்க்கும் பயன்படாது கெடுதல், நல்ல ஆன்பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன்சுவைத்தாகாது கெட்டாற்போலும்.
3 பரிமேலழகர்
பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் - பண்பில்லாதவன் முன்னை நல்வினையான் எய்திய பெரிய செல்வம், அக்குற்றத்தால் ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று - நல்ல ஆன் பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன் சுவைத்தாகாது கெட்டாற் போலும். ('கலத்தீமை' என்பது மெலிந்து நின்றது. தொழிலுவம மாகலின் பொருளின்கண் ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. படைக்கும் ஆற்றல் இலனாதல் தோன்ற 'பெற்ற' என்றும், எல்லாப் பயனும் கொள்ளற்கு ஏற்ற இடனுடைமை தோன்ற, 'பெருஞ்செல்வம்' என்றும் கூறினார். அச்செல்வமும் பயன்படாது என்ற இதனான் வருகின்ற அதிகாரப் பொருண்மையும் தோற்றுவாய் செய்யப்பட்டது. இவை நான்கு பாட்டானும் அஃது இல்லாரது இழிவு கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் - பண்பில்லாதவன் பழம் பிறப்பிற் செய்த நல்வினையின் பயனாக அடைந்த பெருஞ்செல்வம், ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; நல் பால் கலம் தீமையால் திரிந்து அற்று- நல்ல ஆவின்பால் வார்த்த கலத்தின் குற்றத்தாற் களிம்பேறிக் கெட்டாற்போலும். கலந்தீமை என்பது இன்னோசை பற்றிக் கலந்தீமை யென மெலிந்தது. வினையுவமையாதலின் ,பொருளின்கண் ஒத்ததொழில் வருவிக்கப்பட்டது. முன்னை நல்வினைப்பயன் என்பது தோன்றப் ' பண்பிலான் ' என்றும் , ஈட்டும் ஆற்றலிலன் என்பது தோன்றப் ' பெற்ற ' என்றும், எல்லாப் பயனும் பெறுதற்கேற்றது என்பது தோன்றப் ' பெருஞ்செல்வம் ' என்றும , உடையவனுக்கும் பயன்படாமை தோன்றத் ' திரிந்தற்று ' என்றும், கூறினார். இதனால் வருகின்ற அதிகாரத்திற்குந் தோற்றுவாய் செய்யப்பட்டது. இந்நான்கு குறளாலும் பண்பிலாரின் இழிவு கூறப்பட்டது.
5 சாலமன் பாப்பையா
நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.
6 கலைஞர் மு.கருணாநிதி
பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்.
7 சிவயோகி சிவக்குமார்
பண்பில்லாதவர் பெற்ற பெருஞ்செல்வம் நல்ல பாலும் அதனுடன் கலக்கும் தீமையால் திரிந்துவிடுதல் போன்று வீணாகிவிடும்.
8 புலியூர்க் கேசிகன்
பண்பில்லாதவன் முன்னை நல்வினையாலே பெற்ற பெருஞ் செல்வமானது, நல்ல ஆவின்பால் கலத்தின் குற்றத்தால் திரிதல் போல, ஒருவருக்கும் பயன்படாமல் போகும்.
More Kurals from பண்புடைமை
அதிகாரம் 100: Kurals 991 - 1000
Related Topics
Because you're reading about Courtesy