பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
Transliteration
parindhavar nalkaarendru aengip pirindhavar
pinselvaai paedhaien nenju.
🌐 English Translation
English Couplet
Thou art befooled, my heart, thou followest him who flees from thee;
And still thou yearning criest: 'He will nor pity show nor love to me.'.
Explanation
You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.
2 மணக்குடவர்
என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று இரங்கி நம்மைவிட்டுப்போனவர் பின்னே போகாநின்றாய், பேதையா யிருந்தாய். இது தலைமகள் தலைமகனிருந்த தேயத்தை நினைத்துக்கவன்ற நெஞ்சிற்குச் சொல்லியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது) என் நெஞ்சு - என் நெஞ்சே; அவர் பிரிந்து நல்கார் என்று - அவர் இவ்வாற்றாமையை அறியாமையின் நொந்து வந்து தலையளி செய்யாராயினார் என்று கருதி; பிரிந்தவர்பின் ஏங்கிச் செல்வாய் பேதை- அறிவித்தற் பொருட்டு நம்மைப் பிரிந்து போயவர்பின் ஏங்கிச் செல்லலுற்ற நீ யாதும் அறியாய் (ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே நல்க வருவர் என்று கருதினமையின் 'பேதை' என்றாள்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(இதுவுமது) என் நெஞ்சு- என் உள்ளமே! அவர் பிரிந்து நல்கார் என்று- அவர் இவ்வாற்றாமையை அறியாமையின் இரங்கி வந்து இன்பந் தரார் என்று கருதி, பிரிந்தவர் பின் ஏங்கிச் செல்வாய்- அதை அறிவித்தற்பொருட்டு நம்மைவிட்டுப் பிரிந்துபோனவர்பின் ஏக்கங்கொண்டு செல்கின்றாய்; பேதை நீ என்ன பேதையாயிருக்கின்றாய்! ஆற்றாமையைக் கண்ணாரக் கண்டும் இரங்காது பிரிந்துபோனவர் இதைச் சென்றறிவித்தவுடன் திரும்பி வந்து இன்பந்தருவாரென்று கருதினமையின், 'பேதை' என்றாள்.
5 சாலமன் பாப்பையா
என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!.
6 கலைஞர் மு.கருணாநிதி
நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
பரிவுடன் இணைந்து இருக்காதவர் என்றாலும் ஏங்கிப் பிரிந்தவர் பின் செல்கின்றாயே பேதை என் நெஞ்சே.
8 புலியூர்க் கேசிகன்
என் நெஞ்சமே! நம் துன்பத்தை நினைந்து இரங்கி வந்து அவர் அன்பு செய்யவில்லை என்று ஏங்கிப் பிரிந்த காதலரின் பின்னாகச் செல்கின்றாயே, நீ பேதைமை உடையை!
More Kurals from நெஞ்சொடுகிளத்தல்
அதிகாரம் 125: Kurals 1241 - 1250