"pariyadhu koorngoattadhu aayinum yaanai" Thirukkural 599 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- திருக்குறளார் வீ. முனிசாமி உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
யானை, பெரிய உடம்பினதாய்க் கூரியகோட்டையும் உடைத்தாயினும் புலி பொருமாயின் அஞ்சும். இஃது உள்ளமுடைமை யில்லாதார் பெரியராயினும் கெடுவார் என்றது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம் - யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும். (பேருடம்பான் வலி மிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
யானை பரியது கூர்ங்கோட்டது ஆயினும் -யானை விலங்குகளெல்லாவற்றுள்ளும் உருவத்திற் பெரியதும், அதோடு கூரிய கொம்புள்ளதுமாயினும் ; புலி தாக்குறின் வெருவும் -உருவப் பருமையுங் கொம்புமில்லாத புலி தன்னைத்தாக்கின் ,அஞ்சி எதிர்க்காது அதனாற் கொல்லப்படும். பருத்தவுடம்பு வலிமிகுதி குறிக்கும். யானை மெய்வலிமை மிக்கதும் குத்தும் உறுப்புடையது மாயிருந்தும் ,ஊக்கமின்மையால் அதனை யுடைய சிற்றுடம்பு மோழைத் தலைப்புலியாற் கொல்லப்படும், என்பது ஊக்கமில்லாத அரசர் படைப் பெருமையுங் கருவிச்சிறப்பும் உடையவராயினும், அவை குன்றியிருந்தும் ஊக்கஞ் சிறந்த சிற்றரசரால் வெல்லப்படுவர் என்பதை உணர்த்துதலால். இது பிறிது மொழிதல் அணியாம் .உம்மை உயர்வு சிறப்பு. ' வெரூஉம்' இன்னிசையளபெடை.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil
எல்லா விலங்கினங்களிலும் தானே பெரிய உடம்பினையுடையது அதுவேயன்றி கூரிய கொம்புகளையும் (தந்தங்களையும்) உடையது என்றாலும், அப்படிப்பட்ட யானையானது, ஊக்கம் நிறைந்த சிறிய உருவங்கொண்ட புலி தனக்கு எதிர்ப்பட்டால் அதற்கு அஞ்சும்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
கூரிய தந்தம் இல்லை என்றாலும் யானையை மடக்கும் ஆர்வம் கொண்ட புலியே ஊக்கத்திற்கு அடையாளம்.
Thirukkural in English - English Couplet:
Huge bulk of elephant with pointed tusk all armed,
When tiger threatens shrinks away alarmed!.
ThirukKural English Meaning - Couplet -Translation:
Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.
ThiruKural Transliteration:
pariyadhu koorngoattadhu aayinum yaanai
veru-um pulidhaak kuRin.