திருக்குறள் - 657     அதிகாரம்: 
| Adhikaram: vinaiththooimai

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

குறள் 657 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pazhimalaindhu eydhiya aakkaththin saandroar" Thirukkural 657 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பழியைச் சுமந் தெய்திய ஆக்கத்தினும், சான்றோர் மாட்டு உளதாகிய மிக்க நல்குரவே தலைமையுடைத்து. மேற்கூறியவாறு செய்யின் நல்குரவு உளதாகு மென்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் - சாலாதார் தீய வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தின்; சான்றோர் கழி நல்குரவே தலை - அதுமேற் கொள்ளாத சான்றோர் அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது. (நிலையாத செல்வத்தின் பொருட்டு நிலையின பழியை மேற்கோடல் சால்போடு இயையாமையின், 'சான்றோர் கழிநல்குரவே தலை' என்றார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பழிமலைந்து எய்திய ஆக்கத்தின்-அறிவிலாதார் தீவினைகளைச் செய்து அவற்றாற் பழியைத் தம் தலைமேல் ஏற்றுக் கொண்டு பெற்ற செல்வத்தைவிட; சான்றோர் கழிநல்குரவேதலை-அப்பழியை மேற்கொள்ளாத அறிவுடையோரின் கடுவறுமையே சிறந்ததாம். சான்றோர் அறிவு அல்லது நற்குணம் நிறைந்தோர். தீயோர் செல்வம் இம்மைக்குப் பழியும் மறுமைக்குத் துன்பமும் பயத்தலால், அவ்விரண்டு மில்லாத நல்லோர் வறுமை அதனினுஞ் சிறந்தது என்றார். கொடிய வறுமை யாயினும் என்பார் 'கழிநல்குரவு' என்றார். கொடிய வறுமையாவது, நாள்முழுதும் வருந்தியுழைத்தும் வருவது ஒருவேளையுணவிற்கும் பற்றாமை. ஏகாரம் பிரிநிலை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தீமையான தொழில்களைச் செய்து அதனால் பழியினைத் தாம் மேற்கொண்டு பெற்ற செல்வத்தினை விடப் பழியினை மேற்கொள்ளாத சான்றோர்கள் அனுபவிக்கும் மிகுந்த வறுமையே உயர்ந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அதிகபட்ச பழியுடன் அடையும் உயர்வைவிட, முன்மாதரியாய் இருந்து கழிந்துவிடும் வறுமையை அடைவது முதன்மையானது.

Thirukkural in English - English Couplet:


Than store of wealth guilt-laden souls obtain,
The sorest poverty of perfect soul is richer gain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds.

ThiruKural Transliteration:


pazhimalaindhu eydhiya aakkaththin saandroar
kazhinhal kuravae thalai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore