திருக்குறள் - 44     அதிகாரம்: 
| Adhikaram: ilvaazhkkai

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

குறள் 44 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pazhiyanjip paaththoon udaiththaayin" Thirukkural 44 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்வாழ்க்கையாகிய நிலை, பழியையுமஞ்சி பகுத்துண்டலையுமுடைத்தாயின், தனதொழுங்கு, இடையறுதல் எக்காலத்தினுமில்லை. மேல் பகுக்குமாறு கூறினார். பகுக்குங்காற் பழியோடு வாராத பொருளைப் பகுக்க வேண்டுமென்று கூறினார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின் - பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்பு உடைய மூவர் முதலாயினார்க்கும் தென் புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின்; வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல் - அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை. (பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார். வாழ்வானது உடைமை வாழ்க்கை மேல் ஏற்றப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வாழ்க்கை - ஒருவனது இல்லறவாழ்க்கை; பழி அஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் - ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்தற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின் ; வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்-அவனது மரபுவழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம். இறைவனருளும் உலகோர் வாழ்த்தும் அவன் வழியை நீடிக்கச் செய்யும் என்பது கருத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மற்றவர்கள் கூறும் பழிக்கு அஞ்சிப் பிறர்க்கும் பகுத்துக் கொடுத்து வாழ்கின்ற இல்லறத்தானுடைய பரம்பரை என்றும் குறைவின்றி இருப்பதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பழித்துவிடதாவாறு பக்குவமாக உண்ணுவது புரிந்து விட்டால் வாழ்க்கையின் பாதையில் இடையுறு இல்லை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பழிக்குப் பயமும், உள்ளதைப் பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து உண்ணும் இயல்பும் உடையதானால், வாழ்க்கை வழிக்கு எப்போதுமே குறைவு இல்லை.

Thirukkural in English - English Couplet:


Who shares his meal with other, while all guilt he shuns,
His virtuous line unbroken though the ages runs.

ThirukKural English Meaning - Couplet -Translation:


His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others).

ThiruKural Transliteration:


pazhiyanjip paaththooN udaiththaayin vaazhkkai
vazhiyenjal enhjGnaandrum il.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore