பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.
Transliteration
pazhudheNNum mandhiriyin pakkadhadhuL thevvoar
ezhupadhu koadi uRum.
🌐 English Translation
English Couplet
A minister who by king's side plots evil things
Worse woes than countless foemen brings.
Explanation
Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.
2 மணக்குடவர்
குற்றப்பட எண்ணும் அமைச்சரில் எழுபது கோடி மடங்கு நல்லர், உட்பகையாய்த் தன் னருகிலிருப்பவர். இவை யிரண்டும் மந்திரிகளுள் விடப்படுவாரது இலக்கணங் கூறின.
3 பரிமேலழகர்
பக்கத்துள் பழுது எண்ணும் மந்திரியின் - பக்கத்திருந்து பிழைப்ப எண்ணும் அமைச்சன் ஒருவனில்; ஓரெழுபதுகோடி தெவ்உறும் - அரசனுக்கு எதிர் நிற்பார் ஓரெழுபதுகோடி பகைவர் உறுவர். (எழுபது கோடி என்றது மிகப் பலவாய எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு. வெளிப்பட நிற்றலான் அவர் காக்கப்படுவர்; இவன் உட்பகையாய் நிற்றலான் காக்கப்படான் என்பதுபற்றி இவ்வாறு கூறினார். 'எழுபது கோடி மடங்கு நல்லர்' என்று உரைப்பாரும், 'எழுபது கூறுதலை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பழுது எண்ணும் மந்திரியில் - நன்மை செய்கிறவன்போல் அருகிலிருந்து கொண்டு தீமையை எண்ணும் அமைச்சன் ஒருவனில்; பக்கத்துள் ஓர் எழுபது கோடி தெவ் உறும் - அரசனுக்குப் பக்கமாகவே எழுபது கோடிப் பகைவர் அமைவர். புறப்பகைவர் பலராயினும் அவருக்குத் தப்பமுடியும். அகப்பகைவராயின், அவருள்ளும் சூழ்ச்சித்துணையாயிருக்கும் அமைச்சனே வீழ்ச்சித்துணையாயிருப்பின், ஒருவனே யாயினும் தப்ப முடியாதாம். ஆதலால் 'பக்கத்துள்தெவ் எழுபது கோடியுறும்' என்றார். ஏழு என்பது நிறைவான எண்ணும் கோடி என்பது பேரெண்ணுமாதலால், எழுபது கோடி யென்றது உண்மையில் அதனினும் மிகப் பெரிய தொகையையே. அதனால் அழிவிற்குத் தப்ப முடியாது என்னும் உண்மையைக் குறித்தார். அமைச்சன் என்றும் அரசனுக்குப் பக்கமாகவே யிருப்பவனாதலாலும், பழுதெண்ணும் மந்திரியால் வருங்கேட்டிற்குத் தப்பமுடியா தென்பதையே ஆசிரியர் வலியுறுத்த விரும்புவதாலும் , 'பக்கத்துள்தெவ்' என்றே குறளிற் சொற்றொடர் நிற்றலாலும், 'பக்கத்துள்' என்னுஞ் சொல் 'தெவ்' என்பதையே தழுவுவதாம். பகைவர் மாபெருந் தொகையராயினும், சேய்மையில் நிற்பவரினும் அண்மையில் நிற்பவரால் அழிவு உறுதியாதலை எண்ணிக் காண்க. இதனால், அரசன் விழிப்பாயிருந்து ஒற்றர் வாயிலாக உண்மை யறிந்து, ஐயுறவிற்கிடமான அமைச்சனை உடனே விலக்கவேண்டு மென்பது கூறப்பட்டது. 'எழுபது கோடியுறும்' என்பதற்கு எழுபது கோடிமடங்கு நல்ல ரென்றுரைப்பது பொருந்தாது. இனி, "எழுபது கோடி தலை" என்றும் எழுபது கூறு தலை என்றும், பண்டை யுரையாசிரியன்மார் கொண்ட பாடமும் பொருந்துவன வாகா.
5 சாலமன் பாப்பையா
தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.
6 கலைஞர் மு.கருணாநிதி
தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
மடத்தனமான ஆலோகர் அருகில் இருப்பது எதிரிகள் எழுபது கோடி இருப்பதுபோல் ஆகிவிடும்.
More Kurals from அமைச்சு
அதிகாரம் 64: Kurals 631 - 640
Related Topics
Because you're reading about Ministers & Advisors