பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்.
Transliteration
peelipey saakaatum achchiRum appaNtanhj
saala mikuththup peyin.
🌐 English Translation
English Couplet
With peacock feathers light, you load the wain;
Yet, heaped too high, the axle snaps in twain.
Explanation
The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
2 மணக்குடவர்
பீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்; அப்பீலியை மிகவும் அளவின்றியேற்றின். இஃது அரண் மிகுதல் நன்றென்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் நில்லாதென்று கூறிற்று.
3 பரிமேலழகர்
பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - பீலியேற்றிய சகடமும் அச்சு முரியும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின். (உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயு மன்றிப் பீலியது நொய்மைச் சிறப்பும் தோன்ற நின்றது. 'இறும்' என்னுஞ் சினைவினை முதல்மேல் நின்றது. 'எளியர்' என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியும் , என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். இதனை 'நுவலா நுவற்சி' என்பாரும், 'ஒட்டு' என்பாரும்உளர். ஒருவன் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனால் மாற்றான் வலியும் அவன் துணை வலியும் அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - வைக்கோலினும் நொய்ய மயில்தோகை யேற்றிய வண்டியும் அச்சு முறியும் ; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பொருளை வண்டிதாங்கும் அளவிற்கு மிஞ்சி யேற்றின் . மயில்தோகையும் அளவுக்கு மிஞ்சி வண்டியிலேற்றின் அச்சொடியும் என்பது , பகைவர் தனித்தனி மிகச்சிறியாராயினும் மிகப்பலர் ஒன்று கூடின் , தனிப்பட்ட பகைவன் எவ்வளவு வலியவனாயினும் அவனை வென்று விடுவர் என்னும் பொருள்பட நிற்றலால் , பிறிதுமொழிதல் என்னும் அணியாம் .இது நுவலாநுவற்சியென்றும் ஒட்டு என்றுஞ் சொல்லப்படும் . பகைவர் சிறியராயினும் மிகப்பலரை ஒருங்கே பகைக்கக் கூடாதென்பதும் , பகைவர் வலியைத் தனித்தனி அறியாது தொகுத்தறிதல் வேண்டுமென்பதும் , இதனாற் கூறப்பட்டன . உம்மைஇழிவு சிறப்பு , சாகாடு என்பது சகடம் என்னும் சொல்லின் பல்வடிவுகளுள் ஒன்றாம் . இதுவுந்தென்சொல்லே . 'இறும்' என்னும் துணைவினை முதல்மேல் நின்றது , 'காலொடிந்தான்' என்பதில் ஒடிந்தான் என்பது போல . 'சாலமிகுத்து' மீமிசைச்சொல் .
5 திருக்குறளார் வீ. முனிசாமி
மயிலிறகு ஏற்றி வைக்கப்பட்ட வண்டியும் அச்சு முறிவதாகிவிடும்; எப்போதும் என்றால், அம்மயிலிறகானது மிகவும் அதிக்கப்படுத்தப்பட்டு ஏற்றப்பட்டால் என்பதாம்.
6 சாலமன் பாப்பையா
மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.
8 சிவயோகி சிவக்குமார்
மயில் இறகை போன்றதாலும் அச்சு முறியும் அதுவே அளவில் மிகுந்தால்.
More Kurals from வலியறிதல்
அதிகாரம் 48: Kurals 471 - 480