Kural 1295

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

peraaamai anjum perinpirivu anjum
araaa idumpaiththen nenju.

🌐 English Translation

English Couplet

I fear I shall not gain, I fear to lose him when I gain;
And thus my heart endures unceasing pain.

Explanation

My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.

2 மணக்குடவர்

காதலரைப் பெறாதகாலத்துப் புணர்வு இல்லையோ என்று அஞ்சும்; பெற்றோமாயின் பிரிவாரோ என்று அஞ்சும்; ஆதலால் இடைவிடாத துன்பத்தை உடைத்து என்னெஞ்சு. இது தலைமகள் ஆற்றாமைகண்டு தூதுவிடக் கருதிய தோழிக்கு அவர் வந்தாலும் இதற்குள்ளது துன்பமே யென்று அதனொடு புலந்து கூறியது.

3 பரிமேலழகர்

(வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது.) பெறாமை அஞ்சம் - காதலரைப் பெறாத ஞான்று அப்பெறாமைக்கு அஞ்சாநின்றது; பெறின் பிரிவு அஞ்சும் - பெற்றக்கால் வரக்கடவ பிரிவினை உட்கொண்டு அதற்கு அஞ்சா நின்றது; என் நெஞ்சு அறா இடும்பைத்து - ஆகலான், என் நெஞ்சம் எஞ்ஞான்றும் நீங்காத இடும்பையை உடைத்தாயிற்று. (காதலரைப் பெற்று வைத்துக் கலவியிழத்தல் உறுதியன்று என்னும் கருத்தான் வாயில் நேர்கின்றாளாகலின், 'பெறாமை அஞ்சும்' என்றும் , 'கலவி ஆராமையின் இன்னும் இவர் பிரிவாராயின் யாது செய்தும்' என்பது நிகழ்தலின், 'பெறின் பிரிவு அஞ்சும்' என்றும், இவ்விரண்டுமல்லது பிறிது இன்மையின், 'எஞ்ஞான்றும் அறா இடும்பைத்து' என்றும் கூறினாள்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(வாயிலாகச் சென்ற தோழிகேட்பத் தலைமகள் சொல்லியது.) பெறாமை அஞ்சும்-காதலரைப் பெறாதபோது அப்பெறாமைக்கு அஞ்சுகின்றது ; பெறின் பிரிவு அஞ்சும்-பெற்றபோதோ எதிர்காலத்தில் நேரக் கூடிய பிரிவைக் கருதிக்கொண்டு அதற்கு அஞ்சுகின்றது;என் நெஞ்சு அறா இடும்பைத்து- இங்ஙனம் என் உள்ளம் தீராத துன்பத்தையுடையதா யிருக்கின்றது. பெறாதபோது கலவியின்மை பற்றியும் பெற்றபோது கலவிதொடராமை பற்றியும் அச்சம் உண்டாவதால் , என் வாழ்க்கை எப்போதும் துன்பவாழ்க்கையே என்பதாம். அஞ்சுதல் அஞ்சி வருந்துதல் , ' பெறாஅமை,' அறாஅ இசைநிறை யளபெடைகள்.

5 சாலமன் பாப்பையா

என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.

6 கலைஞர் மு.கருணாநிதி

என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.

7 சிவயோகி சிவக்குமார்

உறவு பெறாமல் இருந்தாலும் அஞ்சும், பெற்றாலும் அஞ்சும் தீராத துன்பம் தருவது ஏன் என் நெஞ்சே.

8 புலியூர்க் கேசிகன்

அவரைப் பெறாத போதும் அஞ்சும்; பெற்ற போதும் பிரிவாரோ என்று அஞ்சும்; இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துயரையே உடையதாகின்றது

More Kurals from நெஞ்சொடுபுலத்தல்

அதிகாரம் 130: Kurals 1291 - 1300

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature