பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு.
Transliteration
perukkaththu vaendum paNidhal siRiya
surukkaththu vaendum uyarvu.
🌐 English Translation
English Couplet
Bow down thy soul, with increase blest, in happy hour;
Lift up thy heart, when stript of all by fortune's power.
Explanation
In great prosperity humility is becoming; dignity, in great adversity.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.
2 மணக்குடவர்
செல்வம் பெருகிய காலத்து எல்லார்க்கும் பணிதல் வேண்டும்: செல்வம் மிகவுஞ் சுருங்கின் காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுகல் வேண்டும்.
3 பரிமேலழகர்
பெருக்கத்துப் பணிதல் வேண்டும் - குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வம் உளதாயவழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும்; சிறிய சுருக்கத்து உயர்வு வேண்டும் - குறைந்த நல்குரவுளதாயவழிப் பணியாமை வேண்டும், (பணியாமை - தாழ்வு வாராமற் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல். செல்வக்காலை அஃது உயர்ச்சி செய்யத் தாம் உயர்தலும் வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் தாம் தாழ்தற்கு ஏதுவாயின செய்யாமைச் சிறப்புக் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பெருக்கத்துப் பணிதல் வேண்டும்- குடிப் பிறந்தார்க்கும் தன்மானியர்க்கும் பெருமை நிறைதற்கேற்ற செல்வக் காலத்தில் யாவரிடத்தும் தாழ்மையாயிருத்தல் வேண்டும்; சிறிய சுருக்கத்து உயர்வு வேண்டும் - பெருமை குறைதற் கேதுவான வறுமைக் காலத்தில், அக்குறையை நிறைத்தற் பொருட்டுத் தாழ்மையில்லாதிருத்தல் வேண்டும். "எல்லார்க்கும் நன்றாம் பணித லவருள்ளுஞ் செல்வர்க்கே செல்வந் தகைத்து." (குறள் 125) "நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்." ஆதலால், செல்வக் காலத்தில் தாழ்மையும் மேன்மையைத் தருதலையும் வறுமைக் காலத்தில் தாழ்மை தாழ்வையே தருதலையும் நோக்கி, பெருக்கத்துப் பணிவும் சுருக்கத்து உயர்வும் வேண்டும் என்றார். இங்குப் பணியாமை யென்றது செருக்கற்ற தன்மான நிலையை. தன் மானியார் என்று தனிப்படக் குறித்தது குடிப்பிறப் பின்றியும் கல்வி யொழுக்கங்களால் மேம்பட்டுத் தன்மானங் காப்பவரை. இம் முன்று குறளாலும் மானங்காக்கும் வழிகள் கூறப்பட்டன.
5 சாலமன் பாப்பையா
நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.
7 சிவயோகி சிவக்குமார்
பெருமைக்குறிய இடம் அடைந்தால் பணிவுடன் இருக்க வேண்டும். சிறுமையான சுருக்கத்தில் தன் உயர்வை காக்க வேண்டும்.
8 புலியூர்க் கேசிகன்
உயர் குடியிலே பிறந்தவர்களுக்கு, நிறைந்த செல்வம் உண்டானபோது, பணிவுடைமை வேண்டும்; செல்வம் சுருங்கி வறுமை உண்டாகும்போது உயர்வு வேண்டும்.
More Kurals from மானம்
அதிகாரம் 97: Kurals 961 - 970
Related Topics
Because you're reading about Honor & Dignity