"perumai perumidham inmai sirumai" Thirukkural 979 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
பெருமையுடையவர் நெறியினானே செய்யவல்லர்: செய்தற்கு அருமையுடைய செயல்களை. இது செய்தற்கு அரிய செய்வார் பெரியரென்றது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
பெருமை பெருமிதம் இன்மை - பெருமைக்குணமாவது காரணமுண்டாய வழியும் அஃது இயல்பாதல் நோக்கித் தருக்கின்றியிருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடல் - சிறுமைக் குணமாவது அஃது இல்வழியும் அதனை ஏற்றுக்கொண்டு தருக்கின் முடிவின்கண்ணே நின்றுவிடுதல். ('அளவறத் தருக்குதல'¢ என்பதாயிற்று. 'விடும'¢ என்று பாடம் ஓதுவாரும் உளர், முற்றுத்தொடரும் எழுவாய்த் தொடரும் தம்முள் இயையாமையின், அது பாடமன்மை உணர்க.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
பெருமை பெருமித மின்மை - பெருமைக் குணமாவது பெருமிதத்திற் கேற்ற சிறப்பிருந்தும் அதை யியல்பெனக் கொண்டு அமைந்திருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் - சிறுமைக் குணமாவது ஒரு சிறப்பும் இல்லாதிருந்தும் அதைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு செருக்கின் எல்லைவரை சென்றுவிடுதல். இங்கும் மாந்தர் செயல்கள் அவர் பண்பின்மேல் ஏற்றிக் கூறப்பட்டன. 'ஊர்ந்துவிடல்' முடிவிடம்வரை ஏறிச்செல்லுதல் ; குறிப்புருவகம், 'விடும்' என்பது மணக்குடவ காலிங்கர் பாடம்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லாமலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
பெருமை ஆணவம் இல்லாமல் இருக்கும். சிறுமை ஆணவத்துடனே அடுத்ததை செய்யும்.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
பெருமை குணம் ஆவது, காரணம் உள்ள போதும் தருக்கின்றி அமைந்திருத்தல்; சிறுமைக்குணமாவது பெருமை அற்ற போதும் தருக்கி, முடிவில் நின்றுவிடலாகும்.
Thirukkural in English - English Couplet:
Greatness is absence of conceit; meanness, we deem,
Riding on car of vanity supreme.
ThirukKural English Meaning - Couplet -Translation:
Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.
ThiruKural Transliteration:
perumai perumidham inmai siRumai
perumidham oorndhu vidal.