பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து.
Transliteration
piNiyinmai selvam vilaivinpam Emam
aNiyenpa naattiv vaindhu.
🌐 English Translation
English Couplet
A country's jewels are these five: unfailing health,
Fertility, and joy, a sure defence, and wealth.
Explanation
Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
2 மணக்குடவர்
நோயின்மையும், செல்வமுடைமையும், விளைவுடைமையும், இன்பமுடைமையும், காவலுடைமையுமென்று சொல்லப்பட்ட இவையைந்தும் நாட்டிற்கு அழகென்று சொல்லுவர்.
3 பரிமேலழகர்
பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் இவ் ஐந்து - நோயின்மையும் செல்வம் விளைதல் இன்பம் காவல் என்றிவை உடைமையுமாகிய இவ்வைந்தனையும்; நாட்டிற்கு அணி என்ப- நாட்டிற்கு அழகு என்று சொல்லுவர் நூலோர். (பிணியின்மை, நில நலத்தான் வருவது. செல்வம், மேற்சொல்லியன. இன்பம், விழவும் வேள்வியும் சான்றோரும் உடைமையானும், நுகர்வன உடைமையானும்,நில நீர்களது நன்மையானும் வாழ்வார்க்கு உள் நிகழ்வது. 'காவல்' எனவே, அரசன் காவலும், வாழ்வோர் காவலும் அரண் காவலும் அடங்கின. பிற தேயங்களினுள்ளாரும் விழைந்து பின் அவையுள்ளாமைக்கு ஏதுவாய அதன் அழகு இதனாற் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் இவ்வைந்து - நோயின்மை, செல்வம், விளையுள் , இன்ப முண்மை, பாதுகாப்பு ஆகிய இவ்வைந்தும்; நாட்டிற்கு அணி என்ப - ஒரு நாட்டிற்கு அழகு என்று சொல்வர் அறிஞர். 'பிணியின்மை' நிலநலம், நீர்நலம், உணவுநலம், தட்பவெப்பச் சமநிலை முதலியவற்றால் வருவது. 'செல்வம்' நிலமும் வீடும், தட்டு முட்டுக்களும், பொன்னும் வெள்ளியும் மணியும், ஊர்தியும் கால்நடையும், பன்னாட்டு விளைபொருளும் செய்பொருளுமாகிய பொருட் செல்வமும்; கல்விச் செல்வமுமாம். 'விளைவு' மேற்கூறிய நானில விளையுள். 'இன்பம்' நாடக நடிப்பு, அழகிய இயற்கைக் காட்சி, திருவிழா, இசையரங்கு, சொற்பொழிவு, நால்வகை அறுசுவையுண்டி, நன்காற்று, இனிய இல்லற வாழ்வு, தட்பவெப்பச் சமநிலை; நிலவிளையாட்டு, நீர் விளையாட்டு, வேலை வாய்ப்பு, வரிப்பளுவின்மை, செங்கோலாட்சி முதலியவற்றால் நேர்வது. 'ஏமம்' செங்கோலாட்சி, படைவலிமை, அரண் சிறப்பு, பகையின்மை ஆகியவற்றால் ஏற்படுவது. இத்தகைய நாடு மண்ணுலகில் விண்ணுலகம் போன்ற தென்பது கருத்து.
5 சாலமன் பாப்பையா
நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்.
6 கலைஞர் மு.கருணாநிதி
மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
நோய் இல்லாது இருத்தல், நிறைந்த செல்வம், நல்விளைச்சலுடன் வளரும் இன்பம், பாதுகாப்புத் தன்மை இவை ஐந்தும் நாட்டின் அணிகலன்கள்.
More Kurals from நாடு
அதிகாரம் 74: Kurals 731 - 740