Kural 141

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

piranporuLaaL pettozhukum paedhaimai gnaalaththu
aRamporuL kaNtaarkaN il.

🌐 English Translation

English Couplet

Who laws of virtue and possession's rights have known,
Indulge no foolish love of her by right another's own.

Explanation

The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

2 மணக்குடவர்

பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.

3 பரிமேலழகர்

[அஃதாவது, காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விழையாமை.இஃது ஒழுக்கம் உடையார்மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின்பின் வைக்கப்பட்டது.) பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல் - ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை. (பிறன் பொருள்: பிறன் உடைமை, அறம், பொருள் என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்' என்றார்.எனவே அப்பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.).

4 ஞா. தேவநேயப் பாவாணர்

பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - வேறொருவன் உடமையாகவுள்ளவளைக் காதலித் தொழுகும் மடைமை ; ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல் - நிலவுலகத்தில் அறநூலையும் , பொருள்நூலையுங் கற்றுத் தெளிந்தவரிடம் இல்லை . பிறன் மனைவியைக் காதலிப்பவர் , இம்மைக்குரியனவும் மாந்தனுக்கு உறுதிபயப்பனவுமான அறம் பொருளின்பம் என்னும் மூன்றனுள் இன்பம் ஒன்றையே கருதியவர் என்பதை உணர்த்தற்கு , ' அறம் பொருள் கண்டார்கணில் ' என்றார். பொருள்நூலை அறியாததினால் பிறன் மனைவி பிறன் பொருளென்பதும் , அறநூலை யறிதாததினால் பிறன் பொருளை நுகர்தல் தீவினை யென்பதும் , தெரியாதுபோயின . அறம் பொருள் என்பன கருமிய ( காரிய) வாகுபெயர் . எண்ணும்மை தொக்கது . பூமி என்னும் வடசொல் வழங்கவே , ஞாலம் என்னும் தென்சொல் வழக்கற்றது . பேதைமை என்பது நல்லதை விட்டுவிட்டுத் தீயதைத் தெரிந்துகொள்ளுந் தன்மை .

5 திருக்குறளார் வீ. முனிசாமி

பிறனுக்குப் பொருளாம் தன்மையுடைய இல்லாளைக் காதலித்து ஒழுகும் அறியாமைக் குணம் உலகில் அறம் பொருள் நூல்களை ஆராய்ந்து கண்டவரிடத்தில் இல்லையாகும்.

6 சாலமன் பாப்பையா

இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.

7 கலைஞர் மு.கருணாநிதி

பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.

8 சிவயோகி சிவக்குமார் விளக்கம்:

அடுத்தவர் பொருளையே பயன்படுத்திக் கொள்ளும் அறியாமை அறிவினால் நேர்மையின் பொருள் அறிந்தவரிடத்தில் இல்லை.

More Kurals from பிறனில் விழையாமை

அதிகாரம் 15: Kurals 141 - 150

Related Topics

Because you're reading about Avoiding Adultery

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature