Kural 633

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

piriththalum paenik koLalum pirindhaarp
poruththalum valla thamaichchu.

🌐 English Translation

English Couplet

A minister is he whose power can foes divide,
Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.

Explanation

The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.

2 மணக்குடவர்

மாற்றரசரிடத்து உள்ளாரையும் நட்பாகிய அரசரையும் அவரிடத் தினின்று பிரித்தலும், அவ்வாறு பிரிக்கப்பட்டாரை விரும்பித் தம்மிடத்துக் கொளலும், தம்மிடத்து நின்று பிரிந்தாரைக் கூட்டிக் கொளலும் வல்லவன் அமைச்சனாவான்.

3 பரிமேலழகர்

பிரித்தலும் - வினை வந்துழிப் பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும்; பேணிக்கொளலும் - தம்பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக்கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும் - முன்னே தம்மினும் தம் பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்த வேண்டின் பொருத்தலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். (இவற்றுள் அப்பொழுதை நிலைக்கு ஏற்ற செயலறிதலும், அதனை அவர் அறியாமல் ஏற்ற உபாயத்தால் கடைப்பிடித்தலும் அரியவாதல் நோக்கி, 'வல்லது' என்றார். வடநூலார், இவற்றுள் பொருத்தலைச் 'சந்தி' என்றும் பிரித்தலை 'விக்கிரகம்' என்றும் கூறுப.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

பிரித்தலும் -போர் வந்தவிடத்துப் பகைவரின் துணைவரை அவரினின்று பிரித்தலும்; பேணிக்கொளலும் - தம் துணைவரைத் தம்மினின்று பிரியாவாறு இன்சொல்லாலும் கொடையாலும் பேணிக்கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும் - முன்பு தம்மினின்றும் தம் துணைவரினின்றும் பிரிந்து போனவரைத்தேவையாயின் திரும்பவும் சேர்த்துக் கொள்ளுதலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். பிரித்தலுள் , பகைவரின் துணைவரை ஒருவரோடொருவர் கூடாவாறு வேறுபடுத்தலும் ; பேணிக்கொளலுள், புதிதாகத் தமக்கு நட்பாக வருபவரைப் போற்றிக் கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலுள், உண்மை யன்பில்லாதவ ரிடத்தில் தாமும் அன்புள்ளவர் போல் நடித்தலும்; அடங்கும். இனி, இரசியமும் சீனமும் போலப் பகைவர் தாமாகப் பிரிந்துபோம் போது அப்பிரிவினையை ஊக்குதலும் , பிரித்தலுள் அடங்கும். இங்ஙனம் அவ்வப்பொழுதை நிலைக்கேற்றவாறும், சிலவற்றை மறைவாகவும் சில வற்றைவெளிப் படையாகவும் , செய்யவேண்டியிருத்தலின், 'வல்லது' என்றார்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தக்க காலத்தில் பிரிக்க வேண்டியவர்களைப் பிரித்தலும், வேண்டியவர்களை நன்கு ஆதரித்துப் பிரியாமல் வைத்துக் கொள்ளலும், பிரிந்தவர்களைப் பொறுத்த வேண்டின் பொருத்தலும் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.

6 சாலமன் பாப்பையா

நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

7 கலைஞர் மு.கருணாநிதி

அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்.

8 சிவயோகி சிவக்குமார்

தேவையற்றதை விலக்குவதும், தேவையானதை ஏற்ப்பதும், பிரிந்துப் போனவர்களை பொருத்தலும் வல்லமையுடன் செயல்படுவதே அமைச்சு.

More Kurals from அமைச்சு

அதிகாரம் 64: Kurals 631 - 640

Related Topics

Because you're reading about Ministers & Advisors

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature