பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை.
Transliteration
pirivuraikkum van-kannar aayin aridhavar
nalkuvar ennum nasai.
🌐 English Translation
English Couplet
To cherish longing hope that he should ever gracious be,
Is hard, when he could stand, and of departure speak to me.
Explanation
If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.
2 மணக்குடவர்
பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின் அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை. இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது.
3 பரிமேலழகர்
(தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின் -நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும். (அருமை: பயன்படுதல் இல்லாமை.. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது'? என்பதாம். அழுங்குவித்தல் : பயன்.)
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(தலைமகன் பிரிவுணர்த்தியதைத் தெரிவித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின்-என் காதற்பெருக்கையுங் கவவுக்கை யிறுக்கையும் கண்டறிந்த தலைவர் தாமே, நம் முன்நின்று தம் பிரிவை யுணர்த்தும் வன்னெஞ்சராயின்; நல்குவர் என்னும் நசை அரிது-அத்தன்மையர் பின்பு நம் ஆற்றாமையறிந்து வந்து பேரன்பு செய்வரென்னும் ஆசையை விட்டுவிட வேண்டியதுதான். இது தலைமகள் தன் இளமையினாலும் இல்லறத் தொடக்கநிலையினாலும், பொருளின் இன்றியமையாமையையும் ஆடவர் கடமையயும் உணராது காதலொன்றையே கருதிக்கூறிய கூற்றாகும். அருமை பெரும்பாலும் நிறைவேறாமை, செலவழுங்குவித்தல் பயன்.
5 சாலமன் பாப்பையா
நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.
6 கலைஞர் மு.கருணாநிதி
போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்.
7 சிவயோகி சிவக்குமார்
பிரிவை சொல்லும் அளவிற்கு கடுமையானவராக இருப்பவர் என்றால் அரியதுதான் அவர் நல்லன செய்வார் என்ற நப்பாசை.
8 புலியூர்க் கேசிகன்
‘பிரிவைப் பற்றிச் சொல்லும் கொடியவர் அவரானால்’, அவர் மீண்டும் திரும்பி வந்து நமக்கு இன்பம் தருவார் என்னும் நம் ஆசையும், பயன் இல்லாததே!
More Kurals from பிரிவாற்றாமை
அதிகாரம் 116: Kurals 1151 - 1160
Related Topics
Because you're reading about Pain of Separation