திருக்குறள் - 528     அதிகாரம்: 
| Adhikaram: sutrandhazhaal

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.

குறள் 528 - திருவள்ளுவர் - ThiruValluvar

"podhunhoakkaan vaendhan varisaiyaa noakkin" Thirukkural 528 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின் அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர். இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் - எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின், அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர். (உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப்பொது நோக்கை விலக்கி,எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார்.இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வேந்தன் பொது நோக்கான் வரிசையா நோக்கின் - அரசன் எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அவரவர் தகுதிக்கேற்ப நோக்குவானாயின் ; அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் உறவினர் பலராவர் . எல்லாவகையிலும் மக்கள் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றோ தலையாயார் இடையாயார் கடையாயார் என்றோ , முதல்வகுப்பினர் இரண்டாம் வகுப்பினர் எனப்பல வகுப்பின ராகவோ , இயற்கையாகவும் செயற்கையாகவும் பாகுபட்டிருத்தலால் , தன்மானமுள்ள மேலோர் நீங்காவாறு பொது நோக்கை விலக்கி எல்லாரையும் தழுவுமாறு வரிசைநோக்கை நெறியிட்டார் . 'வேந்தன்' என்பது இங்குத் தன் சிறப்புப் பொருள் குறியாது அரசன் என்னும் பொருள் குறித்து நின்றது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொது நோக்கு அற்று அரசு பாகுபடுத்திப் பார்த்தால் மக்களில் பலர் பாகுபாடுக் கொண்டே வாழ்வார்கள்.

Thirukkural in English - English Couplet:


Where king regards not all alike, but each in his degree,
'Neath such discerning rule many dwell happily.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit.

ThiruKural Transliteration:


podhunhoakkaan vaendhan varisaiyaa noakkin
adhunhoakki vaazhvaar palar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore