Kural 1002

பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும் மருளானா மாணாப் பிறப்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

poruLaanaam ellaamendru eeyaadhu ivaRum
maruLaanaam maaNaap piRappu.

🌐 English Translation

English Couplet

Who giving nought, opines from wealth all blessing springs,
Degraded birth that doting miser's folly brings.

Explanation

He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.

2 மணக்குடவர்

பொருளினாலே யெல்லாச்சிறப்பும் எய்தலாமென்று பிறர்க்கு யாதொன்றும் ஈயாது உலோபஞ் செய்கின்ற மயக்கத்தினாலே மாட்சிமையில்லாத பிறப்பு உண்டாம். இது தீக்கதியுள் உய்க்குமென்றது.

3 பரிமேலழகர்

பொருளான் எல்லாம் ஆம் என்று - பொருளொன்றும் உண்டாக அதனால் எல்லாம் உண்டாம் என்றறிந்து அதனை ஈட்டி; ஈயாது இவறும் மருளான் - பின் பிறர்க்கு ஈயாது பற்றுள்ளம் செய்யும் மயக்கத்தாலே; மாணாப் பிறப்பு ஆம் - ஒருவனுக்கு நிறைதலில்லாத பேய்ப்பிறப்பு உண்டாம். (இருமையினும் எய்தும் இன்பங்கள் பலவும் அடங்க 'எல்லாம்' என்றும், ஈட்டுதற்கு முன் உண்டாய அறிவு பின் மயங்குதலின், 'மருள்' என்றும், பொருளுண்டாயிருக்கப் பிறர் பசி கண்டிருந்த தீவினைபற்றி உணவுகள் உளவாயிருக்கப் பசித்து வருந்தும் பிறப்பு உளதாம் என்றும் கூறினார்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

பொருளான் எல்லாம் ஆம் என்று - செல்வமொன்று மட்டுமிருந்தால் அதனால் எல்லாக் கருமமும் ஆகுமென்று கருதி ; ஈயாது இவறும் மருளான் - அதைப் பிறர்க்கீயாது இறுகப் பற்றும் மயக்கத்தினால் ; மாணாப் பிறப்பு ஆம் - இழிவான பிறப்பு உண்டாம். இம்மைக்கும் மறுமைக்கு முரிய வினையின்பங்கள் யாவும் அடங்க ' எல்லாம் ' என்றார். மருளாவது செல்வம் நிலையானதென்றும் , பிறர்க்கு ஈவதாற் குறைந்துவிடுமென்றும் கருதுதலும் ; "செல்வம் சகடக்கால் போல வரும் " என்றும் (நாலடி.2) , செல்வத்துப் பயனே யீதல் (புறம். 189) "ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்" என்றும் , இம்மைச் செய்தது மறுமைக் காம் (புறம்.134) என்றும் , அறியாமையுமாம், மாணாப் பிறப்பாவன. சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும் கூனுங் குறளு மூமுஞ் செவிடும் மாவும் மருளும் (புறம்.28) என்னும் எண்பேரெச்சமும் அலியுமாம்.இனி ,வீணாகப் புதையலைக் காக்கும் பேயும் பூதமும் எனினுமாம்.

5 சாலமன் பாப்பையா

பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.

7 சிவயோகி சிவக்குமார்

பொருளாள் எல்லாம் ஆகும் என்று யாருக்கும் கொடுக்காமல் இருக்கும் யாரும் அருளற்ற மீளா பிறப்பு அடைவர்.

8 புலியூர்க் கேசிகன்

‘பொருளினால் எல்லாமே உண்டாகும்’ என்று அறிந்து, அதனை எவருக்கும் கொடாமல், அதன் மீது மயக்கத்தை உடையவனுக்குப் பேய்ப் பிறவிதான் ஏற்படும்.

More Kurals from நன்றியில்செல்வம்

அதிகாரம் 101: Kurals 1001 - 1010

Related Topics

Because you're reading about Useless Wealth

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature