பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர்.
Transliteration
porulmaalai yaalarai ulli marulmaalai
maayum-en maayaa uyir.
🌐 English Translation
English Couplet
This darkening eve, my darkling soul must perish utterly;
Remembering him who seeks for wealth, but seeks not me.
Explanation
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
(பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
2 மணக்குடவர்
பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து மயங்கின மாலைப்பொழுதிலே எனது சாகமாட்டாத உயிர் மெலியாநின்றது. இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் அறனும் இலனென்று நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) மாயா என் உயிர் -காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் - இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது. ('குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார், காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை', என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
மாயா என் உயிர்- இதுவரை காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடா திருந்த என் உயிர்; பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும்- இன்று பொருளியல்பையே தமக்கு இயல்பாக வுடையவரை நினைந்து இம் மயங்கும் மாலைப் பொழுதில் இறந்து படுவதாகும். குறித்த பருவங் கடந்தும் பொருண் முடிவு கருதி வராமையின், சொன்ன சொல்லை நிறைவேற்றுந் தம்மியல் பொழிந்து பொருளியல் பையே தம்மியல்பாகக் கொண்டவரை நினைந்து இனியாற்றிப் பயனில்லை. ஆதலால், இனி நீ ஒன்றுஞ் சொல்ல வேண்டுவதில்லை யென்பதாம்.
5 சாலமன் பாப்பையா
அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.
6 கலைஞர் மு.கருணாநிதி
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.
7 சிவயோகி சிவக்குமார்
பொருள் தேடி சென்றத் தலைவனை எண்ணி அச்சம் தரும் மாலைப் பொழுதுக்கு அழியும் என் அழியா உயிர்.
8 புலியூர்க் கேசிகன்
பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைத்து, பிரிவுத் துன்பத்தாலே போகாமல் நின்ற என் உயிரானது, இம் மாலைப் பொழுதில் நலிவுற்று மாய்கின்றதே!
More Kurals from பொழுதுகண்டிரங்கல்
அதிகாரம் 123: Kurals 1221 - 1230