திருக்குறள் - 1259     அதிகாரம்: 
| Adhikaram: niraiyazhidhal

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

குறள் 1259 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pulappal enachchendraen pullinaen nenjam" Thirukkural 1259 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன்: நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு. இஃது கூடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன் (வாயாமை - புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) (இ-ரை.) புலப்பல் எனச் சென்றேன்-அவர் வந்தபொழுது . உரையாடாது ஊடவேண்டுமென்று கருதி அவர் முன்நில்லாது வேறோரிடத்திற்குப் போனேன் ; நெஞ்சம் கலத்தல் உறுவதுகண்டு புல்லினேன்-அங்ஙனம் போய்த்தான் என்ன? என் உள்ளம் நிறையில் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலையறிந்து , இனி இவ்வூடல் பயன்படாதென்று அவரைத் தழுவினேன். நிறையழிந்தவர்க்குக் கூடலே யன்றி ஊடலில்லை யென்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


புணரக் கூடாது என சென்றேன் ஆனால் மேய்ந்து கூடினேன் நெஞ்சம் கலக்க ஏங்கியதைக் கண்டு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஊடுவேன் என்று நினைத்துச் சென்றேன்; ஆனால், என் நெஞ்சம் என்னை மறந்து அவரோடு சென்று கலந்து விடுவதைக் கண்டு, அவரைத் தழுவினேன்.

Thirukkural in English - English Couplet:


'I 'll shun his greeting'; saying thus with pride away I went:
I held him in my arms, for straight I felt my heart relent.

ThirukKural English Meaning - Couplet -Translation:


I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!.

ThiruKural Transliteration:


pulappal enachchendraen pullinaen nenjam
kalaththal uruvadhu kandu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore