"pulaththalin puththelnaadu undoa nilaththodu" Thirukkural 1323 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ?.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டுப் புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?. நிலத்தோடு நீரியைதலால் அவை வெப்பமும் தட்பமும் கூடியிருக்குமாறு போல இன்பமும் துன்பமும் கூட அனுபவிப்பார் மாட்டென்றவாறு.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
(இதுவும் அது.) நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல; புத்தேள் நாடு உண்டோ - நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை. (நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின்', அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள், 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ' என்றும் கூறினாள், உவமம் பயன்பற்றி வந்தது.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
(இதுவுமது) நிலத்தொடு நீர் இயைந்த அன்னாரகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமையுடைய காதலரொடு புலத்தல் போல்; புத்தேள் நாடு உண்டோ- நமக்கு இன்பந்தருவதொரு தேவருலகம் எங்கேனு முண்டோ? இல்லை. நீர் தான் சேர்ந்த நிலத்தொடு கலத்தல் மட்டுமின்றி அதனியல்பால் திரிதலும் போல, காதலருந் தாம் கூடிய மகளி ரியல்பின ராகலான் அதுபற்றி அவரொடு புலவி நிகழுமென்பாள் ' நிலத்தொடு நீரியைந் தன்னாரகத்து ' என்றும், அப்புலவி பின்னர்ப் பேரின்பம் பயக்குமென்பாள் புலத்தலிற் புத்தேணா டுண்டோ என்றும், கூறினாள். ' கூடிய மகளிரியல்பின ராதலென்பது இங்குந் தலைமகள் கருதுகோளேயன்றி உண்மையாக நிகழும் நிகழ்ச்சியன்றென வறிக.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
இணைந்து மகிழ்வதில் புதிய நாடு உண்டோ? நிலத்துடன் நீர் கலந்ததைப் போன்றவர்களின் அகத்தை அறிந்தால்.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
நிலத்தோடு நீர் பொருந்தினாற் போல நம்மோடு கலந்த அன்பு உடையவரான காதலருடன் ஊடுவதைக் காட்டிலும், தேவருலகத்து இன்பமும் சிறந்ததாகுமோ!
Thirukkural in English - English Couplet:
Is there a bliss in any world more utterly divine,
Than 'coyness' gives, when hearts as earth and water join?.
ThirukKural English Meaning - Couplet -Translation:
Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?.
ThiruKural Transliteration:
pulaththalin puththelnaadu undoa nilaththodu
neeriyainh thannaar akaththu.