Kural 1301

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

pullaa thiraaap pulaththai avar-urum
allalnoai kaankam siridhu.

🌐 English Translation

English Couplet

Be still reserved, decline his profferred love;
A little while his sore distress we 'll prove.

Explanation

Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

2 மணக்குடவர்

நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலத்தல் வேண்டும்: அவ்விடத்து அவருறும் கலக்கத்தை யாம் சிறிது காண்பேமாக. இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறிப்புக் கண்டு முகங்கொடாமைப் பொருட்டு இனிமை கூறியது.

3 பரிமேலழகர்

[அஃதாவது , இருவர் நெஞ்சும் புணர்ச்சி விதும்பாது புலக்கக் கருதியவழி ஒருவரோடு ஒருவர் புலத்தல் . அதிகார முறையையும் இதனானே விளங்கும் .] (வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.) அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம் - அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக்கடவோம்; புல்லாது இராப் புலத்தை - நீ அவரை விரைந்து சென்று புல்லாதே; இத்தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக. (அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள், புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. 'புலத்தை' என்புழி ஐகாரம் 'கடம்பூண்டொருகால் நீ வந்தை' (கலித்.குறிஞ்சி.27) என்புழிப்போல, முன்னிலை வினை விகுதி. 'புலத்தி' என்பதூஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள் வழியளாய் நின்று, 'நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்' என நகையாடி நேர்வித்தவாறு.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.) புல்லாது இராப்புலத்தை - தலைவியே! நீ விரைந்து சென்று காதலரைத் தழுவாது இக்கரணியத்தை மேலிட்டுக் கொண்டு புலப்பாயாக;அவர் உறும் அல்லல் நோய் சிறிதுகாலம்- அங்ஙனம் புலந்தால் அவர் அடையும்துனபநோயைச் சற்றுக் கண்டு களிப்போம். உன் ஆற்றாமை கண்டும் பிரிந்துபோய் நமக்குப் பெருந்துன்பத்தை விளைத்ததினால், நாமும் அவர்க்குச் சிறிது துன்பம் விளைத்து அவர் படும்பாட்டைக் காண்போம் என நகையாடி வாயில் நேர்வித்தவாறு. 'அல்லல்நோய்' துன்பத்தைச் செய்யுங் காமநோய். புலவி நீளின் சுவையிழக்குமாதலால் 'சிறிது' என்றாள். 'புலத்தை' -'ஐ' ஏவலொருமை யீறு, 'புலத்தி' என்பதும் பாடம். 'இராஅ' அசைநிறையளபெடை.

5 சாலமன் பாப்பையா

நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.

6 கலைஞர் மு.கருணாநிதி

ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.

7 சிவயோகி சிவக்குமார்

தழுவாமல் இரு அவர் உடலை அவர் அடையும் துன்ப நோய் காணலாம் சிறிது.

8 புலியூர்க் கேசிகன்

நாம் ஊடும் போது அவர் அடைகின்ற அல்லல் நோயையும் சிறிது நேரம் காணலாம்; அதற்காக, அவர் வந்ததும், அவர் பாற் சென்று தழுவாமல் பிணங்கியிருப்பாயாக.

More Kurals from புலவி

அதிகாரம் 131: Kurals 1301 - 1310

Related Topics

Because you're reading about Lovers' Quarrel

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature