Kural 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

seiyaamal seydha udhavikku vaiyagamum
vaanakamum aatral aridhu.

🌐 English Translation

English Couplet

Assistance given by those who ne'er received our aid,
Is debt by gift of heaven and earth but poorly paid.

Explanation

(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

9 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

2 மணக்குடவர்

முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.

3 பரிமேலழகர்

[அஃதாவது, தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்திஇல் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாகலின் , அதனைப் பாதுகாத்துக் கடிதற் பொருட்டு, இஃது இனியவை கூறலின்பின் வைக்கப்பட்டது. ) செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது - மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.).

4 ஞா. தேவநேயப் பாவாணர்

செய்யாமல் செய்த உதவிக்கு -- தன்னிடத்திலிருந்து ஓர் உதவியையும் முன்பு பெறாதிருந்தும் ஒருவன் தனக்குச் செய்த வுதவிக்கு ; வையகமும் வானகமும் வானகமும் ஆற்றல் அரிது - ' மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அலை ஈடு செய்தல் அரிது . கைம்மாறுகளெல்லாம் எத்துணைச் சிறந்தன வாயினும் , முதல் வினையைப் பின்பற்றின வழிவினைகளாதலின் முதல் வினைக்கு ஈடாகா என்பது கருத்து . செய்யாமைச் செய்தவுதவி யென்று பாடமோதி, மறுத்துதவ மாட்டாமை யுள்ள விடத்துச் செய்த வுதவி யென்று பொருளுரைக்கத் தேவையில்லை. அப்பொருள், "கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு" (211) என்னுங் குறளாற் பெறப்படுதலால்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தனக்கு, முன்பு ஓர் உதவியும் செய்யாதிருக்க ஒருவன் பிறர்க்குச் செய்த உதவிக்கு இவ்வுலகத்தினையும் வானுலகத்தினையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகா.

6 சாலமன் பாப்பையா

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

7 கலைஞர் மு.கருணாநிதி

வாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.

8 சிவயோகி சிவக்குமார்

செய்கிறோம் என்று அறியாமலேயே செய்த உதவியானது பூமியும் வானமும் வழங்குவதை விட மேலானது.

9 புலியூர்க் கேசிகன்

தான் எதுவுமே செய்யாதிருக்கவும், பிறன் தனக்குச் செய்த உதவிக்கு, இவ்வுலகமும் வானுலகமும் ஈடாக முடியாது.

More Kurals from செய்ந்நன்றி அறிதல்

அதிகாரம் 11: Kurals 101 - 110

Related Topics

Because you're reading about Gratitude

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature