செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற.
Transliteration
sellaa idaththuch sinandheedhu sellitaththum
iladhanin theeya piRa.
🌐 English Translation
English Couplet
Where power is none to wreak thy wrath, wrath importent is ill;
Where thou hast power thy will to work, 'tis greater, evil still.
Explanation
Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.
2 மணக்குடவர்
இயலாவிடத்துச் சினந்தீது; இயலுமிடத்திலும் அதிற் றீதாயிருப்பன பிறவில்லை.
3 பரிமேலழகர்
சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் 'தனக்கே தீதாம்'; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர் மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை (செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' 'இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும்' மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை' என்றார், ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவனது சினம் அது தாக்க முடியாத வலியார் மேல் எழின் தனக்கே தீங்காம்; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - அது தாக்கக் கூடிய எளியார் மேல் எழினும் அதைவிடத் தீயவை வேறில்லை. செல்லிடத்துச் சினத்தால் விளைவது இம்மைத் துன்பமே. ஆயின், செல்லாவிடத்துச் சினத்தால் விளைவன இம்மைப்பழியும் மறுமைத் துன்பமுமாம். அதனால் அதனினுந் தீயன வேறில்லை யென்றார்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
கோபம் தன்னைவிட வலியவர்கள் மேல் உண்டாகுமானால் தனக்கே தீமையாகும். மற்ற எளியவர்கள் மீது சென்றால் அதனைவிடத் தீமையானது பிற இல்லையாகும்.
6 சாலமன் பாப்பையா
பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.
7 கலைஞர் மு.கருணாநிதி
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.
8 சிவயோகி சிவக்குமார்
செல்லத்தகாத இடத்தில் சினம் தீமையானது செல்லத் தகுந்த இடத்திலும் அதைவிட தீமையானது இல்லை.
More Kurals from வெகுளாமை
அதிகாரம் 31: Kurals 301 - 310
Related Topics
Because you're reading about Anger Management